Skip to main content

வரலக்ஷ்மி விரதம் - பூஜை முறை, பலன்கள் & ஸ்லோகங்கள் ...

வரலக்ஷ்மி விரதம் - அஷ்டலக்ஷ்மி அருளும் மங்களகரமான வழிபாட்டு முறையும் ஸ்லோகங்களும்!

ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

1. வரலக்ஷ்மி விரதத்தின் மாபெரும் சிறப்பு :

'வரம்' என்றால் 'கேட்கும் நன்மைகளை அள்ளித் தருவது' என்று பொருள். சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் தங்கள் குடும்பத்தில் தீர்க்க சுமங்கலி பாக்யம் பெறவும், சகல ஐஸ்வர்யங்களும் சுபிட்சமும் பெருகவும் அன்னை மகாலக்ஷ்மியை நோக்கி மேற்கொள்ளும் உன்னதமான விரதமே வரலக்ஷ்மி விரதம் ஆகும். 

வரலக்ஷ்மி விரதம் நட்சத்திரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதில்லை. இது கிழமை (வெள்ளி) மற்றும் திதியின் (பௌர்ணமிக்கு முன் வரும் திதி) அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது.

ஆடி அல்லது ஆவணி மாதத்தில் (ஷ்ரவண மாதம்) வரும் வளர்பிறை பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமை அன்று இந்த விரதம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது இதன் முக்கிய விதியாகும்.

இந்நாளில் மகாலக்ஷ்மியை ஆவாஹனம் செய்து வழிபட்டால், அஷ்டலக்ஷ்மிகளையும் (ஆதி, தானிய, தைரிய, கஜ, சந்தான, விஜய, வித்யா, தன லக்ஷ்மிகள்) ஒரே நாளில் வழிபட்ட மாபெரும் புண்ணியம் கிடைக்கும்.

2. புராண வரலாறு (வரலக்ஷ்மி விரத மகிமை) :

மகத நாட்டில் வாழ்ந்த சாருமதி என்ற தீவிர விஷ்ணு-லக்ஷ்மி பக்தை, தனது மாமனார், மாமியார் மற்றும் கணவரை தெய்வம்போல் உபசரித்து வந்தாள். அவளது கற்பையும் பாசத்தையும் கண்டு மகிழ்ந்த அன்னை மகாலக்ஷ்மி, சாருமதியின் கனவில் எழுந்தருளி, " ஷ்ரவண மாத வளர்பிறை வெள்ளிக்கிழமையில் என்னை ஆவாஹனம் செய்து வரலக்ஷ்மி விரதம் இருந்தால், உனக்கு வேண்டிய வரங்களை அள்ளித் தருவேன்" என்று அருளினாள். 

சாருமதி தன் ஊர் பெண்களோடு இணைந்து இந்த விரதத்தைப் பக்தியோடு அனுஷ்டித்தாள். விரதத்தின் முடிவில், அவர்கள் அணிந்திருந்த கலச நூலின் மகிமையினாலும், தேவியின் அருளினாலும் அவர்களின் வீடுகள் அனைத்தும் பொன்னும் பொருளும் நிறைந்து சுபிட்சமடைந்தது. இந்த வரலாற்றைக் கைலாயத்தில் சிவபெருமான் அன்னை பார்வதி தேவிக்கு உபதேசித்ததாகப் பத்ம புராணம் கூறுகிறது

3. யாரெல்லாம் வரலக்ஷ்மி விரதம் இருக்கலாம் ?

சாஸ்திரங்களும் புராணங்களும் இதைப் பற்றி மிகத் தெளிவாகக் கூறுகின்றன:

  1. சுமங்கலிப் பெண்கள் (Married Women): தங்கள் கணவரின் ஆயுள் பெருகவும் (தீர்க்க சுமங்கலி பாக்கியம்), குடும்பத்தில் மாங்கல்ய பலம் மற்றும் சந்தான பாக்கியம் (குழந்தைப் பேறு) தழைக்கவும் திருமணமான பெண்கள் அனைவரும் இந்த விரதத்தைக் கண்டிப்பாகப் பின்பற்றலாம். 
  1. கன்னிப் பெண்கள் (Unmarried Girls): நல்ல குணமும், அன்பும் கொண்ட கணவன் அமைய வேண்டும் என்றும், மனம்போல் மாங்கல்யம் அமைய வேண்டும் என்றும் கன்னிப் பெண்களும் வரலக்ஷ்மி விரதத்தைப் பூஜித்து நோன்புக் கயிறு கட்டிக் கொள்ளலாம். 
  1. கர்ப்பிணிப் பெண்கள் (Pregnant Women): கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தாராளமாக இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். உடல்நிலை காரணமாக உபவாசம் (பட்டினி) இருக்க முடியாவிட்டால், பால், பழங்கள் அல்லது எளிய உணவுகளை உட்கொண்டு மனப்பூர்வமாக அன்னைக்கு அர்ச்சனை செய்து பூஜையை மட்டும் செய்யலாம்.


4. முன்னோர்கள் செய்யாதவர்கள் இந்த விரதத்தைச் செய்யலாமா? (Sampradaya vs Shastra) :

பலருக்கும் "முன்னோர்கள் அல்லது மாமியார் செய்யாத போது நாம் இப் பூஜையைச் செய்யலாமா?" என்ற கேள்வி உள்ளது:

  • குடும்ப மரபு (Sampradaya): "குடும்பத்தின் மூத்த பெண்கள் பாரம்பரியமாகச் செய்து வந்திருந்தால் மட்டுமே மருமகள்கள் தொடர வேண்டும்" என்ற பழக்கம் சில சமூகங்களில் நடைமுறையில் உள்ளது
  • சாஸ்திர உண்மை (Shastra Verdict): பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ள வரலக்ஷ்மி விரத மான்மியத்தில் "முன்னோர்கள் செய்திருக்க வேண்டும்" என்ற எந்தக் கட்டுப்பாடும் கிடையாது! சாருமதிக்கு முன்பாக அவளது முன்னோர்கள் யாரும் இந்த பூஜையைச் செய்ததில்லை. அன்னை மகாலக்ஷ்மியின் அருள் அனைவருக்கும் பொதுவானது. 
  • முன்னோர்கள் செய்யாதவர்கள் தொடங்கும் முறை: குடும்பத்தில் வரலக்ஷ்மி விரதப் பாரம்பரியம் இல்லாதவர்கள், விரத நாளன்று அன்னை மகாலக்ஷ்மியின் படத்திற்கு மலரிட்டு, விளக்கேற்றி, நெய்வேத்தியம் படைத்து எளிய முறையில் வழிபடலாம் (பட வழிபாட்டிற்கு மரபுத் தடை இல்லை). கலசம் வைத்துச் செய்ய விரும்புவோர், குலதெய்வத்தின் அருளை வேண்டி, குடும்பப் பெரியவர்களிடம் ஆசி பெற்று, ஒரு புதிய ஆன்மீகத் தொடக்கமாகத் தாராளமாக வரலக்ஷ்மி பூஜையைத் தொடங்கலாம்.

5. வரலக்ஷ்மி விரத பூஜை முறைகள் {Step-by-Step Pooja Method} :

) முன் நாள் தயாரிப்பு (வியாழக்கிழமை மாலை):

  • வீட்டைத் தூய்மை செய்து, வாசலில் அரிசி மாவால் கோலமிட வேண்டும். 
  • ஒரு பித்தளை அல்லது வெள்ளிச் செம்பை (கலசம்) சுத்தம் செய்து, அதில் அரிசி, நாணயம், ஏலக்காய், லவங்கம், மற்றும் பச்சைக் கற்பூரம் போட வேண்டும். 
  • கலசத்தின் வெளிப்பகுதியில் மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு, மாவிலை கொத்தைச் செம்பின் மேல் வைக்க வேண்டும். ஒரு தேங்காய்க்கு மஞ்சள் பூசி மாவிலையின் நடுவே பிரதியஷ்டை செய்ய வேண்டும். 

) விரத நாள் (வெள்ளிக்கிழமை காலை):

  1. கலச ஆவாஹனம்: அதிகாலையில் நீராடி, பூஜை அறையில் ஒரு மனையின் மீது கோலமிட்டு, வாழையிலை விரித்து அதில் பச்சரிசி பரப்ப வேண்டும். அதன் மேல் தயார் செய்து வைத்துள்ள மகாலக்ஷ்மி கலசத்தை வைக்க வேண்டும் (அம்மன் முகம் அல்லது வெள்ளி உருவம் கலசத்தில் பொருத்தலாம்).  
  1. மஞ்சள் பிள்ளையார் பூஜை: எந்தவொரு சுப காரியத்திற்கும் முன்னதாக மஞ்சள் தூளில் சிறிதளவு நீர் தெளித்துப் பிள்ளையார் பிடித்து வைத்து, "ஓம் கணபதயே நமஹ" என்று துதித்து அருகு மற்றும் மலர் சாற்றி முதல் பூஜை செய்ய வேண்டும். 
  1. நோன்புக் கயிறு (நோன்புச் சரடு) தயாரித்தல்: 9 முடிச்சுகள் (நவக்கிரகங்கள் மற்றும் 9 வகை லக்ஷ்மிகளின் குறியீடு) போட்ட மஞ்சள் கயிற்றை அம்மனின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். 
  1. அர்ச்சனை & நிவேதனம்: மகாலக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லிச் செவ்வரளி, தாமரை அல்லது மல்லிகைப் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். கொழுக்கட்டை, பாயாசம், சுண்டல், அப்பம், வடை மற்றும் பழங்களை நிவேதனமாகப் படைக்க வேண்டும். 
  1. சரடு கட்டுதல் (வலது கை சாஸ்திர விதி): பொதுவாகப் பெண்களுக்கு இடது கையில் கயிறு கட்டுவது வழக்கமாக இருந்தாலும், வரலக்ஷ்மி விரதத்தில் மட்டும் பெண்கள் தங்களின் வலது கையில் (Right Hand) தான் நோன்புக் கயிற்றைக் கட்ட வேண்டும். 
  1. மங்கள தாம்பூலம்: மாலையில் சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்துத் தாம்பூலம் (வெற்றிலை, பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம், ரவிக்கை துணி) வழங்கி அவர்களின் ஆசி பெற வேண்டும்.

 6.  கலச விசர்ஜன முறைகள் :

  • புனர்பூஜை மற்றும் கலச விசர்ஜனம் (Punar Pooja & Kalasa Visarjanam): சனிக்கிழமை காலையில் அம்மனுக்கு மீண்டும் ஒரு சிறிய பூஜை (புனர்பூஜை) செய்து, நைவேத்தியம் படைத்து, கலசத்தை வடக்குப் பக்கமாகச் சற்றே நகர்த்தி வைக்க வேண்டும் (விசர்ஜனம்). சனிக்கிழமை காலையில் ராகு காலம், எமகண்டம் இல்லாத நல்ல நேரத்தில் புனர்பூஜை செய்ய வேண்டும். 
  • கலச அரிசி மற்றும் தேங்காயைப் பயன்படுத்தும் முறை:

    • கலசத்தில் வைத்த பச்சரிசியை வீணாக்காமல், அதோடு மேலும் சிறிது அரிசி சேர்த்துச் சர்க்கரைப் பொங்கல் செய்து பிரசாதமாகச் சாப்பிடலாம். 
    • கலசத் தேங்காயைப் பாயாசம் செய்யப் பயன்படுத்தலாம். 
    • கலச நீரை வீட்டின் அனைத்து மூலைகளிலும் தெளித்து, எஞ்சிய நீரைத் துளசிச் செடி அல்லது மரத்தின் வேரில் ஊற்ற வேண்டும். 

7. வரலக்ஷ்மி விரதத்திற்குரிய சக்தி வாய்ந்த ஸ்லோகங்கள் {Sacred Slokas}

1. கலச ஸ்தாபன/ஆவாஹன ஸ்லோகம்:

"லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜ தனயாம் ஶ்ரீரங்க தாமேஶ்வரீம்।
தாஸீபூத ஸமஸ்த தேவ வனிதாம் லோகைக தீபாங்குராம்॥

ஶ்ரீமன்மந்த
கடாக்ஷ லப்த விபவ ப்ரஹ்மேந்த்ர கங்காதராம்।
த்வாம் த்ரைலோக்ய குடும்பினீம் ஸரஸிஜாம் வந்தே முகுந்தப்ரியாம்॥"
 

2. வரலக்ஷ்மி தியான ஸ்லோகம்:

"பத்மாஸனே பத்மகரே ஸர்வலோகைக பூஜிதே।
நாராயணப்ரியே தேவி ஸுப்ரீதா பவ ஸர்வதா॥"

3. நோன்புக் கயிறு (நோன்புச் சரடு) கட்டும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

"நவதந்து ஸமாயுக்தம் நவக்ரந்தி யுதம் ஶுபம்। 
பத்னாமி தட்சிணே ஹஸ்தே வரலக்ஷ்மி ப்ரஸீத மே॥"

(பொருள்: 9 இழைகளும் 9 முடிச்சுகளும் கொண்ட இந்த பரிசுத்தமான நோன்புச் சரடை எனது வலது கையில் ('தட்சிணே ஹஸ்தே') கட்டிக் கொள்கிறேன். அன்னை வரலக்ஷ்மியே, என் மீது பிரசன்னமாகி அருள்புரிவாயாக!)

8. முடிவுரை:

வரலக்ஷ்மி விரதம் என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல; அது குடும்பத்தின் ஒற்றுமையையும், பெண்களின் ஆன்மீகப் பலத்தையும் பெருக்கும் மகத்தான வழிபாடாகும். அன்னை மகாலக்ஷ்மியை முழு மனதோடு சரணடைந்து இந்நாளில் வழிபடுபவர்களின் இல்லங்களில் வறுமை அகன்று, என்றும் நிலைத்த செல்வமும், அமைதியும், மங்களமும் தழைத்தோங்கும்.

செல்வ வளங்களை அள்ளித்தரும் லக்ஷ்மி அஷ்டோத்ரம் |  ஸம்ஸ்க்ருத ஸ்லோக வரிகள் தமிழில்...காணொளி வடிவில் ...இதோ... 

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் ஸமஸ்க்ருத ஸ்லோக வரிகள் தமிழில் உச்சரிப்பதற்கு ஏற்ப காணொளி வடிவில், இதோ... 


உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட்ஸ் பகுதியில் பதிவிடுங்கள்...


...இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post) 

இதோ இங்கு கிளிக் செய்யுங்கள்... 


...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 

இதோ இங்கு கிளிக் செய்யுங்கள்... 


...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.


#VaralakshmiPooja
#VaralakshmiViratham
#OruThuliAanmeegam
#OTA
#ThaamiraaDharmaRakshanaSabha
#ஒருதுளிஆன்மீகம் 

Protected by Copyscape

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status