Skip to main content

விரதங்களில் உயர்ந்ததும், ஒப்பிட முடியாததும் எது ?

Protected by Copyscape

உபவாசங்களில் உயர்ந்தது - ஓர் பார்வை ?

இந்த 'சிறியவனிடம்' அடிக்கடி நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" குழு  உறுப்பினர்கள்  மற்றும் நண்பர்கள், உறவினர்கள் பலராலும் கேட்கப்படும் ஒரு கேள்வி  - எதற்காக எப்பொழுதும் ஏகாதசி விரதம் பற்றியும் 'பிரதோஷம்' பற்றியும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து எழுதுகிறீர்கள் அல்லது பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று ? 

ஏன் என்றால், இரண்டுமே மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் தான்... 'பிரதோஷ மகிமை'  பற்றி வேறு ஒரு பதிவில் காண்போம். தற்போது, ஏகாதசி விரத மகிமை பற்றி,  'காஞ்சி மஹா பெரியவா' அவர்கள் கூறியதை நாம் படித்தோமேயானால், இந்த 'சிறியவன்', ஏகாதசிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து சொல்லிக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருக்கின்றேன் என்பது தெளிவாக புரிந்து விடும்...




ஏகாதசி பற்றி "காஞ்சி மஹா பெரியவா" உரையில் இருந்து... 

விரத உபவாஸங்களில் உச்ச ஸ்தானத்தில் இருப்பது ஏகாதசி.

ந காயத்ர்யா: பரம் மந்த்ரம் ந மாது: பர தைவதம் |
ந காச்யா: பரமம் தீர்த்தம் நைகாதச்யா: ஸமம் வ்ரதம் ||

‘காயத்ரிக்கு மேலே மந்திரமில்லை; அம்மாவுக்கு மேலே தெய்வமில்லை (தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை); காசிக்கு மேலே தீர்த்தமில்லை’ என்று சொல்லிக் கடைசியில் ‘ஏகாதசிக்கு ஸமானமாக விரதமெதுவுமில்லை’  என்று முடிகிறது. மற்றதற்கெல்லாம் ‘மேலே’ ஒன்றுமில்லை என்பதால் அவற்றுக்கு ‘ஸமமாக’ ஏதாவது இருந்தாலும் இருக்கலாம் என்று ஆகிறது. ஆனால் விரதங்களை எடுத்துக்கொண்டால், அவற்றில் ஏகாதசிக்கு ‘மேலே’ மட்டுமில்லாமல், அதற்கு ‘ஸமமாக’க் கூட எதுவுமில்லையென்று ரொம்பவும் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறது.

அஷ்ட வர்ஷாதிக: மர்த்ய: அபூர்ணாசீதி வத்ஸர:|
ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷயோ: உபயோ: அபி ||


என்று தர்ம சாஸ்த்ரம் கூறுகிறது. அதாவது மநுஷ்யராகப் பிறந்தவர்களில் எட்டு வயஸுக்கு மேல் எண்பது வயதுக்கு உட்பட்ட எல்லோரும் இரு பக்ஷங்களிலும் (15 நாள்களுக்கு ஒரு முறை - மாதம் இருமுறை)  வரும் ஏகாதசிகளில் உபவாஸம் இருக்க வேண்டும் என்று அர்த்தம். 

எந்த ஸம்ப்ரதாயக்காரன், (சைவம், வைஷ்ணவம், மற்றும் பல...)  எந்த ஜாதிக்காரன், ஆணா, பெண்ணா என்ற வித்யாஸமில்லாமல், ‘மர்த்ய’, அதாவது மநுஷ்யராகப் பிறந்த எல்லோரும் ஏகாதசி உபவாஸம் அநுஷ்டிக்க வேண்டும் என்று இது சொல்கிறது. ரொம்பவும் கருணையோடு குழந்தைகளையும், தள்ளாத கிழவர்களையும் சிரமப்படுத்த வேண்டாமென்றுதான் எட்டு வயஸுக்குக் கீழே இருப்பவர்களுக்கும், எண்பது வயஸுக்கு மேலே போனவர்களுக்கும் விதிவிலக்கு கொடுத்திருக்கிறது. அவர்கள் உபவாஸம் இருக்கக் கூடாது என்று கண்டிப்புச் செய்ததாக அர்த்தமில்லை. முடிந்தால் அவர்களும் இருக்கலாம். முடியவில்லை என்பதால் இல்லாவிட்டாலும் பாதகமில்லை என்று அர்த்தம். 


மஹாராஷ்டிரம் முதலிய இடங்களில் ஏகாதசியன்று பச்சைக் குழந்தைக்குக்கூட பால் கொடுக்காத தாய்மார்கள் இருந்திருக்கிறார்கள்; அந்தக் குழந்தைகளும் அவர்களுடைய நம்பிக்கையிலேயே நன்றாக இருந்திருக்கின்றன என்று சொல்வார்கள். இத்தனை ‘எக்ஸ்ட்ரீம் டிஸிப்ளி’னை தர்ம சாஸ்திர காரகர்களே எதிர்பார்க்கவுமில்லை; ரூலாகப் போடவுமில்லை.


பகவான் கை கொடுப்பான் என்று நம்பி தைர்யமாகப் பூர்ண நியமத்தோடுதான் ஆரம்பிக்க வேண்டும். அப்படியும் முடியாவிட்டால் வீம்பாகப் பட்டினி கிடந்து தேஹ ச்ரமத்தையும் மனஸ் கஷ்டங்களையும் வரவழைத்துக் கொள்ள வேண்டியதில்லை. 
ஏகாதசி தவிர மற்ற உபவாஸ தினங்களில் ஒரே பொழுது பலஹாரம் (சாஸ்த்ரீய பலஹாரத்தைச் சொல்லாமல்,தோசை-இட்லி பலஹாரத்தைத்தான் சொல்கிறேன்) செய்யலாம். இன்னொரு பொழுது சாஸ்தீரிய பலஹாரமான பழம், பால் மட்டும் சாப்பிடலாம். முடியாதவர்கள் ஒருபொழுது அன்னம், ஒருபொழுது தோசை-இட்லி மாதிரி பலஹாரம் பண்ணலாம். ஆனால் முழு நியமப்படி மாற்றிக் கொள்ள முயற்சி பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும்.

ஏகாதசியில் நிர்ஜலமாயிருந்தால் (நிர்ஜலம் என்றால் தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பது)  ரொம்பவும் ச்ரேஷ்டம். (மிகவும் விஷேசம்) அது ரொம்பவும் கஷ்டமும் கூட.
ஸாத்விகமான பானங்கள் (பழச்சாறு) மட்டும் பண்ணுவது அடுத்தபடி.
அதற்கும் அடுத்தப்படி, நிஜப் பலஹாரமாகப் பழத்தோடு பால் சாப்பிடுவது.
அப்புறம் ஒருவேளை மட்டும் பத்துப்படாத சத்துமாவு, பூரி மாதிரியானவற்றைச் சாப்பிட்டு இன்னொரு வேளை பழம், பால் ஆஹாரம் செய்வது.
இன்னம் ஒருபடி கீழே, ஒருவேளை பக்குவமான, புஷ்டியான இட்லி, தோசை, உப்புமா இத்யாதியும் இன்னொரு வேளை பால் பழமும சாப்பிடுவது.


இதற்கும் கீழே போகப்படாது. அதாவது ஒரு வேளைகூட அன்னம் சாப்பிடுவதாக இருக்கப்படாது. மற்ற உபவாஸங்களில் அதமபக்ஷமாக ஒரு வேளை அன்னம், ஒரு வேளை இட்லி, தோசை என்று வைத்துக் கொள்ளும் அளவுக்கு ஏகாதசியைக் கொண்டு வந்துவிடக் கூடாது. ஏகாதசியில் அன்னத்தைச் சாப்பிட்டால் பிராயச்சித்தமே கிடையாது என்றிருக்கிறது. 


சிலவிதமான நோயாளிகள், பலஹீனர்கள், அன்னம் தவிர எதுவுமே ஜெரித்துக் கொள்ள முடியவில்லையென்று நிர்பந்தம் ஏற்பட்டால் சாதத்தை கஞ்சி வடிக்காமல் ஹவிஸ்ஸாகப் பண்ணி அதில் உப்பு, புளி, காரம் எதுவுமே சேர்க்காமல் ஒருவேளை மட்டும் ஸ்வல்பம் ஏகாதசியன்று சாப்பிடலாம். ரொம்பவும் அசக்தமானவர்களுக்குத்தான் இந்த relaxation.  

மற்றவர்களுக்கில்லை. 

அன்று ஒருவன் சாதத்தை சாப்பிட்டால் அதில் ஒவ்வொரு பிடியிலும் நாயின் அமேத்யத்துக்கு ஸமமான பாவத்தைச் சாப்பிடுகிறான் என்று மிகவும் கடுமையாகவே சொல்லியிருக்கிறது: 
"ப்ரதிக்ராஸம் அஸௌ புங்க்தே கிஷ்பிஷம் ச்வாந விட் ஸமம்".

ஹரி ஓம் !!!


Editors Note:
இதனை பற்றிய அறிவியல் பூர்வ விளக்கத்தை மற்றுமொரு பதிவில் விரிவாக பார்ப்போம்.
ஆகவே, முடிந்த வரை (தற்பொழுது அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப / உடல் ஒத்துழைக்கும் அளவுக்கு ஏற்ப [Sugar,BP,Heart Problems, etc etc...]) ஏகாதசி விரதம் இருக்க முயற்சிப்போம்... 

பல அன்பர்களின், வேண்டுகோளை  (நலனை) கருத்தில் கொண்டு தான் "நமது தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" மூலமாக ஒவ்வொரு ஏகாதசிக்கும்   விரதம் இருப்பதை வலியுறுத்தும் விதமாக, ஏகாதசிக்கு  ஒரு நாள் முன்பு, ஒரு நினைவூட்டல் (Reminder Message) தகவலை நாம் 'Whatsapp' மற்றும் 'Telegram' வழியாக நமது குழு உறுப்பினர்களுக்கு அனுப்புவதை ஸேவையாக செய்து  கொண்டிருக்கிறோம். 

உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...

நன்றி ...

ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா, 
திருநெல்வேலி... 



Comments

  1. .உபயோகமான தகவல்

    ReplyDelete
  2. தங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி..இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் / உறவினர்களுக்கும் பகிர்ந்து அவர்களும் பயன் பெற உதவுங்கள்.

    ReplyDelete

Post a Comment

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status