தற்போதுள்ள அத்தனை இந்திய மொழிகளில் லிபிகளுக்கும் ஆதாரமாக இருக்கப்பட்ட பிராம்மி என்ற லிபியில் தான், ரொம்பவும் பழைய சாஸனங்கள் இருக்கின்றன. இந்த மிகப் பழமையான சாஸனங்களின் எழுத்தும் அழகாக, பாஷையும் காவிய அழகோடு (flowery- ஆக) இருக்கின்றன. அப்புறம் பல்லவர் காலக் கல்வெட்டுக்களிலும் எழுத்து அச்சடித்தாற்போல் இருக்கிறது. வாசகமும் இலக்கிய நயத்தோடு இருக்கிறது.
அதன்பின் சோழர் காலத்துச் செப்பேடுகளில், எழுத்தும், வாசகமும் பெருமளவு நன்றாக இருக்கிறது. ஆனால் இரண்டுமே ஆதியில் இருந்ததைவிடக் கொஞ்சம் குறைவு தான். ரொம்பப் பழையது. அச்சடித்த மாதிரி, கண்ணில் ஒத்திக் கொள்ளலாம்போல் இருக்கிறது ! சமீபத்தில் இருநூறு முந்நூறு வருஷங்களுக்கு முந்திய செப்பேடுகளைப் பார்த்தாலோ, ஒரு சீரும் இல்லை; முறையும் இல்லை; தப்பும் அதிகமாக இருக்கிறது. மண்டை மண்டையான எழுத்து. ஏகப்பட்ட இலக்கணப் பிழை.
இப்படியே ஆதிகாலத்திலிருந்து சமீபகாலம் வரையிலான விக்கிரகங்களைப் பார்த்தேன். இவற்றிலும், காலம் சொல்லத் தெரியாதவை ரொம்ப ரொம்ப லட்சணமாயிருக்கின்றன. பல்லவ விக்கிரகங்கள் நிரம்ப நன்றாக இருக்கின்றன. சோழ விக்கிரகங்கள் ஒருமாதிரி நியதியிலே நன்றாக இருக்கின்றன. அதன்பின் வரவர மேலும் அதன் தரம் குறைந்து கொண்டே வருகின்றன. இப்போது யாரிடமாவது புதிதாக ஒரு விக்கிரகம் அடிக்கக் கொடுத்தால் எப்படி இருக்கிறது? அழகோ, சாந்நித்தியமோ,தெய்வக்களையோ பழையவற்றில் இருப்பதுபோல் புதிதில் இருப்பதில்லை.
பழைய காலத்து ஜனங்களுடைய குணம் எப்படி? அதுவும் அதேமாதிரி உயர்ந்துதான் இருந்ததாகத் தெரிகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்நாட்டுக்கு வந்த மெகஸ்தனிஸ், ‘இந்தியாவில் யாராவது, ஏதாவது கொடுத்தாலும்கூடக் கைநீட்டி வாங்கிக்கொள்பவர் இல்லை. எந்தப் பண்டம் எங்கு கிடைத்தாலும் அந்த நாட்டவருக்குத் திருடவே தெரியாது. பொய் சொல்லவே தெரியாது’ என்றெல்லாம் சொல்கிறான்.
சாந்தமும், நல்ல குணமும், தப்பு வழியே இல்லாமல் சரியானபடி போகும் போக்கும் அந்தக் காலத்தில் இருந்தன. இப்போது அந்த நிலை மாறி விட்டது. அந்தக் காலத்தில் ஜனங்கள் எப்படி இருந்தார்கள்? அவர்களுடைய மனசு எப்படி இருந்தது? அந்த மாதிரியே இப்போதும் இருக்கக்கூடாதா? என்று தோன்றுகிறது.
பொதுவாக வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்பட்டுவிட்டால் அப்புறம் அதன் ஒவ்வொரு துறையிலுமே ஒழுக்கத்தினால் உண்டாகிற அழகும் ஏற்பட்டு விடுகிறது. இதனால்தான் பழங்கால சிற்ப சித்திரங்கள், எழுத்து (calligraphy) உட்பட எல்லாம் ஒழுங்காக, அழகாக இருக்கின்றன.
அந்தக் காலத்தில் நல்ல நிலைமையில் இருந்து, இப்போது அதே வம்சத்தில் தோன்றிய ஜனங்களின் நிலை இப்படி எல்லாவற்றிலும் மிகவும் தாழ்வாகப் போனதற்கு, ஏதாவது காரணம் இருக்க வேண்டும் என்று யோசித்தேன்.
அந்தக் காலத்தில் கோயில்களிலெல்லாம் 'மஹாபாரதம்' வாசிக்க வேண்டுமென்று கட்டளை இருந்திருக்கிறது. 'பாரதம்' வாசிப்பதற்கென்றே மானியம் தருகிற சாஸனங்கள் இருக்கின்றன. இப்போது, பெரிய கோவில்களில் எதிலுமே 'பாரதம்' வாசிக்கிறதைக் காணோம். கிராமாந்தரங்களில் கிராம தேவதைகளின் கோயில்களில் மட்டும் எங்கோ 'பாரதம்' வாசிக்கிறதைப் பார்க்கிறோம். கிராம ரக்ஷைக்காக உள்ள, அந்த ஒரு சில கோயில்களுக்கு இன்றும் கிராம மக்கள் போகிறார்கள். ஸினிமா வந்து இவ்வளவு ஜனங்களை ஆகர்ஷிக்கிறபோதுகூட 'மஹா பாரதம்' கேட்க ஜனங்கள் இருக்கிறார்கள் என்றால், பழைய காலத்தில் எப்படி இருந்திருக்கும்? அப்போது மக்களுக்கு வேறே பொழுது போக்கே இல்லையே!
அந்த பாரதத்தில் என்ன இருக்கிறது? பொறுமை என்பதற்கு வடிவமாக தர்மபுத்திரர் இருக்கிறார். சத்தியமான பிரதிக்ஞை என்பதற்கு பீஷ்மர் இருக்கிறார். தானத்துக்குக் கர்ணன். கண்ணியத்துக்கு அர்ஜுனன். இப்படியே ராமாயணத்தை எடுத்துக்கொண்டால், சகல தர்மங்களின் மூர்த்தியாக ஸ்ரீராமன் இருக்கிறார். பெண்களுடைய உத்தமமான தர்மத்துக்கு சீதை இருக்கிறாள். ஸ்ரீ ராமனுக்கு நேர் விரோதியாக ராவணனுக்கு மனைவியாக இருக்கும் மண்டோதரியும் சீதைக்குக் குறைவில்லாத மகாபதிவிரதையாக இருக்கிறாள்.
ராமாயண, பாரதக் கதைகளைக் கேட்கும்போது இப்படிப்பட்ட உத்தமமான ஆத்மாக்களின் ஞாபகம் வருகிறது. படித்தவர், படிக்காதவர் எல்லோருக்கும் அடிக்கடி அந்தக் கதைகள் காதில் விழுந்து கொண்டிருந்தால், நம்மால் அந்த உத்தம பாத்திரங்களைப் போலவே நடக்கமுடியாமற் போனாலும் கூட, இதுதான் நாம் இருக்கவேண்டிய உண்மையான முறை என்ற நினைவு அடிக்கடி வரும். இதற்கே பலனுண்டு. இதனால்தான் இந்தக் கதைகளைக் கேட்டு வந்த அந்தக் காலங்களில், உயர்ந்த தர்மமும், நீதியும் நாட்டில் இருந்தன.
தர்மம், நீதி இரண்டும் சேர்ந்துதான் பண்பு உண்டாகிறது. அந்தப் பண்பாட்டை மாற்றுவதற்கும், குலைப்பதற்கும் இப்போது எத்தனையோ ஏற்பாடுகள் வந்திருக்கின்றன. முன்பு இருந்த பழக்கத்தை மறுபடியும் உண்டாக்குவது கஷ்டம்தான். ஆனாலும் சிறிதாவது செய்யத்தான் வேண்டும். நாம் நல்லது பண்ணிக்கொண்டு போனால் ஈசுவரன் நமக்குக் கை கொடுப்பார். அவர்தான் நமக்குக் கை கொடுத்திருக்கிறார்; கால் கொடுத்திருக்கிறார்; கண் கொடுத்திருக்கிறார். கொஞ்சம் ஆலோசிப்பதற்கு புத்தியும் கொடுத்திருக்கிறார். இந்தச் சக்தியும் புத்தியும் இருப்பதற்குள்ளே திருந்துவதற்கான ஸத்காரியம் செய்ய வேண்டும்.
இப்போது என்ன என்னவோ விதமான ஆபத்துக்கள் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன. ஜனங்கள் இன்ன வழியில் போவது என்று தெரியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும்போது, அநேக கட்சிகள் வந்து அவர்களுடைய புத்தியைப் பலவிதமாகக் குழப்பி மாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நம்முடைய சத்தியமும் நீதியும் தர்மமும் ஜனங்களுடைய மனசில் கலையாமல் நின்று காப்பாற்ற வேண்டும். அப்படிக் காப்பாற்றுவதற்கு 'மஹாபாரதமே' உபகாரமாக இருக்கும் என்று அன்றிலிருந்து இன்றுவரை ஜனங்களுடைய அநுபவத்தினாலே தெரிகிறது.
Editors Note:
இதனை 'பெரியவா' கூறிய காலத்தில் (45-50 வருடங்கள் முன்பு) இருந்ததை விட, இப்பொழுது (2019) நமது 'பாரத தேசம்' எந்த நிலைமையில் உள்ளது என்பது நம் அனைவருக்குமே தெரியும்... (??!!)
ஆகவே, இன்றைய / வருங்கால சந்ததியினருக்கு ஏற்ற வகையில், ஒவ்வொரு கோவில்களிலும், ஒவ்வொரு உற்சவத்திற்கும், குறைந்த பட்சம் அந்தந்த ஊரிலேயே இருக்கக்கூடிய அல்லது அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு ஆன்மீக உரை புரிபவரைக் கொண்டு ஆன்மீக கதா காலட்சேபங்கள் ஏற்பாடு செய்து இதிகாச, புராண விளக்கங்களை கொடுப்பது இந்த கலியுகத்தில் வாழும் நமக்கு மிகுந்த பலனைத்தரும் என்பது இந்த 'சிறியவனின்' தாழ்மையான அபிப்ராயம்.
வாய்ப்பு இருப்பவர்கள் முயற்சிக்கலாமே...
ஆகவே, இன்றைய / வருங்கால சந்ததியினருக்கு ஏற்ற வகையில், ஒவ்வொரு கோவில்களிலும், ஒவ்வொரு உற்சவத்திற்கும், குறைந்த பட்சம் அந்தந்த ஊரிலேயே இருக்கக்கூடிய அல்லது அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு ஆன்மீக உரை புரிபவரைக் கொண்டு ஆன்மீக கதா காலட்சேபங்கள் ஏற்பாடு செய்து இதிகாச, புராண விளக்கங்களை கொடுப்பது இந்த கலியுகத்தில் வாழும் நமக்கு மிகுந்த பலனைத்தரும் என்பது இந்த 'சிறியவனின்' தாழ்மையான அபிப்ராயம்.
வாய்ப்பு இருப்பவர்கள் முயற்சிக்கலாமே...
...ஹரி ஓம்...
உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...
நன்றி ...
நன்றி ...
ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி...
100%true. I stand by you. Pranams.
ReplyDeleteThank you so much... Please do the needful from your side too and spread this message as much as possible..Our pranams...
DeleteVery nice
ReplyDeleteThank you.
Delete