நன்றி: மாலினி ஷ்ரவன் அவர்கள்.
இது வரை உங்கள் அருகாமையில், கண்காணிப்பில் இருந்த ஒரு பெண்ணை ஆயிரம், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உறவினர்கள் யாருமே இல்லாத, புதிய கலாச்சாரம், பண்பாடு, மக்கள், நடைமுறைகளுள்ள ஒரு ஊருக்கு அனுப்பி வைக்க முன் பெற்றோராகிய உங்களுக்கு எனது சில கேள்விகள்:
1) வெளிநாடு போய்த் தான் படிக்க வேண்டுமா? இதே கல்லூரியில் தபாலில் படிக்கும் முறை இல்லையா?
2) படிப்பதற்காக அனுப்பும் உங்கள் மகளுக்குத் தொடர்ந்து பண உதவி செய்யும் அளவுக்கு அல்லது அவசரமான நேரங்களில் பண உதவி செய்யும் அளவுக்கு உங்கள் பொருளாதார நிலைமை உள்ளதா?
3) இன்னொரு நாட்டுக்கு லட்சக் கணக்கில் பணம் செலவழித்து நல்ல விதமாகப் படித்து முடிக்கும் அளவுக்கு உங்கள் மகளுக்குத் திறமை உள்ளதா?
4) பக்கத்து வீட்டுப் பெண் அமெரிக்காவிற்குப் படிக்கப் போகின்றாள் , சித்தி பெண் லண்டனுக்குப் படிக்கப் போகின்றாள். எனவே என் பெண்ணும் வெளிநாட்டில் படிக்கப் போக வேண்டும் என்றதை விடுத்து உண்மையிலேயே வெளிநாட்டுப் படிப்பு உங்கள் பெண்ணிற்குத் தேவையா?
5) உங்கள் பெண் படித்து முடித்துத் திரும்பி வரும் நிலையில் அவளது கலாச்சார மாற்றங்களை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?
நான் தொடர்ந்து எழுதப் போகின்றவை நான் உறுப்பினராக இருக்கும் ஒரு சமூக சேவை அமைப்பினூடாக நான் சந்தித்த பெண்களின் வாழ்க்கை நிலை, எனது வேலை நிமித்தமாக எனக்குத் தெரிய வந்த சில மாணவர்களின் பொருளாதார வசதி, நான் இங்கே தினம் தினம் பார்த்து, கேட்டு, அறிந்து கொண்ட நீங்கள் தெரிந்து கொள்ளாத விஷயங்கள். இவை இங்கு வரும் அனைத்து இந்திய மாணவர்களின் நிலை பற்றி அல்ல. ஆனால் அதிகமான மாணவர்களின் உண்மை நிலை இது தான்.
சிறு வயது முதலே பெற்றோரின் கண்காணிப்பு, அன்பு, அரவணைப்பு என்று வளர்ந்த ஒரு மகளுக்கு Foreign University-இல் நீங்கள் லட்சக்கணக்கில் பணம் கட்டி admission எடுத்து, விசா எடுத்து அப்பளம், வடகம், சீடை, ஊறுகாய், இட்லிப் பொடி என்று எல்லாம் கட்டி Airport-இல் கன்னத்தில் முத்தம் கொடுத்து அனுப்பி விடுகிறீர்கள். இங்கு உங்களுக்குத் தெரிந்தவர் ஒருவர் Airport சென்று உங்கள் மகளைக் கூட்டிக் கொண்டு போய் மகள் படிக்கப் போகும் கல்லூரியின் அருகிலுள்ள வீட்டில் இறக்கி விடுவார் என்ற நம்பிக்கையில் நீங்கள் பெருமையாகவும் நிம்மதியாகவும் வீடு போய் சேருகிறீர்கள். உங்கள் நண்பரும் Airport போய் உங்கள் மகளைக் கூட்டிக் கொண்டு நீங்கள் சொன்ன இடத்தில் இறக்கி விடுவதுடன் அவர் கடமை முடிந்து விடும். மிக நெருங்கிய உறவினர்கள் என்றால் இடையிடையே போய் பார்ப்பார்கள். ஆனால் நிறைய இந்திய மாணவர்களுக்கு இங்கு மிக நெருங்கிய உறவினர்கள் யாரும் கிடையாது.
சில நாட்களில் உங்கள் மகள் சொல்லுவார் பகுதி நேரமாக ஒரு வேலை எடுத்து விட்டேன். அறை வாடகை, சாப்பாட்டுச் செலவு எல்லாவற்றிற்கும் இனி இந்தியாவிலிருந்து பணம் அனுப்பத் தேவை இல்லை என்று. அநேகமான குடும்பங்களின் வருமான நிலையில் இதுவே பெற்றோர்களின் ஆரம்ப வேண்டுகோளாகவும் இருந்திருக்கும். இங்கு வரும் மாணவர்கள் Restricted Overseas Student Visa காரணமாக 20 hours/Week மட்டும் தான் வேலை செய்யலாம். No recourse to public funds-இதன் கருத்து இங்குள்ள இலவச காசு சம்மந்தப்பட்ட (Benefits) எதுவும் இவர்கள் எடுக்க முடியாது. இந்த விசாவில் உள்ளவர்களுக்கு Professional Job கிடைப்பது மிகவும் கஷ்டம். National Minimum Wages Rate 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு £6.08/Hour (21 வயதுக்குக் கீழே என்றால் இன்னும் குறைவு). இச் சம்பளத்தை அநேகமான Odd Jobs செய்பவர்கள் எடுக்கிறார்கள். சராசரியாக ஒரு மாணவன் £526.93/Month (52 weeks/year) Gross Income (before tax) உழைக்கின்றார். இதில் வரி (Tax), National Insurance Number (NI) கட்டினால் மிகுதி Net Income £460/Month கைக்கு வருமோ தெரியாது. இங்கு ஒரு சாதாரண சிறிய அறை வாடகை (தண்ணீர், மின்சாரம்,Gas bills உடன் சேர்த்து) £450-500/மாதம். லண்டனில் இன்னும் அதிகமாக இருக்கும். உங்கள் மகள் எடுக்கும் சம்பளம் அறை வாடகைக்கே போதாது. உங்கள் மகள் நான் ஒரு தனி அறையில் யாருடனும் பகிராமல் வாடகை கட்டி, சாப்பாடு, புத்தகங்கள், ஆடை, அணிகலன்கள், போக்குவரத்து, இதர செலவு அத்துடன் சேமித்து மிகுதியை இந்தியாவிற்கு அனுப்புகிறேன் என்றதை எப்படி உங்களால் நம்ப முடிகிறது?
தனியாக வாடகை கட்ட முடியாத நிலையில் இங்கு மாணவர்களாக வருபவர்கள் 5-6 ஆண்கள், பெண்கள் ஒன்று சேர்ந்து ஒரு அறையை உபயோகிக்கிறார்கள். இது அநேகமான பெற்றோர்களுக்குத் தெரியாது. நிறைய இடங்களில் ஒரே கட்டிலில் நிறையப் பேர் படுத்து எழும்பும் நிலை. இப்படி ஒரு அறையில் எல்லோரையும் வைத்திருப்பது இங்குள்ள சட்டத்திற்குப் புறம்பானது. ஆனால் எமது ஆசிய நாட்டைச் சேர்ந்த வீட்டு Owners (Land Lords) வெளியே தெரியாதபடி Tenancy Agreement-இல் இரண்டு பேரின் பெயரை மட்டும் போட்டு மிகுதிப் பேரைக் கள்ளமாக வைத்துள்ளனர். இவர் இதைச் செய்வதால் தான் தங்களால் குறைந்த வாடகையைக் கொடுக்க முடிகிறது என்பதால் இதை யாரும் வெளியே சொல்வதில்லை. இப்படியான வீடுகளில் குளியலறை வசதிகள், தண்ணீர் வசதிகள், சுகாதார வசதிகள் மிக மோசமான நிலையிலிருக்கும். Rent including bills என்றபடியால் இவர்கள் குளிர் காலத்தில் Central Heating-காக Gas/Electricity-ஐ அதிகமாக உபயோகித்தால் Land lord அந்த Bill-ஐக் கட்ட வேண்டி வரும் என்பதால் இப்படியான வீடுகளில் Central Heating-ஐ வேலை செய்யாமல் ஆக்கி விடுவார்கள். Winter காலத்தில் (Minus 2-3 degree Celsius) நிறைய மாணவர்கள் குளிரில் தான் வாழுகிறார்கள்.
இங்கு வரும் மாணவர்களில் 50% ஆனோர் கல்லூரிகளுக்குப் போவதில்லை. இங்கு காசு கொடுத்து Fake Certificate-ஐ வாங்குகிறார்கள். இது ஒரு Fake என்றதை இந்தியாவிலுள்ள வேலை நிறுவனங்கள் கண்டு பிடிப்பதில்லை. இவர்கள் கல்லூரிகளுக்குப் போகாமல் National Minimum Wage Rate-ஐ விட மிகவும் குறைந்த அளவில் கிடைக்கும் (Tax கட்டாமல் கையில் காசு வருவது போல்-Cash in hand) சம்பளத்திற்காக முழு நேரமாக வேலை செய்கிறார்கள். இதனால் இங்குள்ள Odd Jobs வேலை நிறுவனங்கள் முக்கியமாக சிறிய கடைகள் வைத்திருப்போருக்கு கள்ளமாக குறைந்த செலவில் தொழிலாளர்கள் கிடைக்கிறார்கள். இப்படிப்பட்ட கள்ளமான வேலை எடுக்க இங்கு வரும் சில பெண் மாணவர்கள் தங்களுக்கு வேலை எடுத்துத் தரும் இன்னொரு ஆணுக்கோ அல்லது வேலை தருபவருக்கோ தங்களை இழக்க வேண்டிய சூழ் நிலை உருவாகிறது. காலப் போக்கில் இதுவே அவர்களுக்குப் பழகி விடுகிறது. பணத்தின் தேவைக்காக ஒரு பெண் நிறையப் பேரிடம் கை மாறுப்படுகிறாள்.
கல்லூரிகளுக்குப் போகும் மிகுதி 50% இல் நிறையப் பேர் ஒழுங்காகப் போவதில்லை. விசாவுக்குக் காட்டுவதற்காக இன்னொரு மாணவனுக்குக் காசு கொடுத்து Attendance பதிவு பண்ண வைக்கிறார்கள். ஒழுங்காகப் போனாலும் சில பேர் பரீட்சைகளில் கோட்டை விட்டு விடுகிறார்கள். இங்கு மற்றவர்களுக்காகப் பரீட்சை எழுதுவது, Project செய்வது என்பதையே சில இந்திய மாணவர்கள் ஒரு தொழிலாக வைத்துள்ளார்கள். இங்கே ஆங்கிலேயருக்கு குதிரை ஓடுவது பற்றி இன்னும் தெரியாது. அத்துடன் அவர்களுக்கு அனைத்து இந்திய மாணவர்களின் தோற்றமும் ஒரே மாதிரித் தான் இருக்கும். இவர்கள் ஒரு கேள்வித் தாளுக்கு £100 வரை கேட்பார்கள். இவர்களைப் பரீட்சை நேரங்களில் கல்லூரி வாசல்களில் காணலாம். இப்படிபட்டவர்களால் இங்கு வந்து உண்மையிலேயே படித்து பட்டம் வாங்கும் ஒரு இந்திய மாணவனுக்கு இங்கு வேலை எடுப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. ஏனெனில் சில இந்திய மாணவர்கள் ஒரு Fake Certificate எடுக்க என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று இங்குள்ள வேலை நிறுவனங்களுக்குத் தெரியும். இவர்களுக்கு இந்தியாவில் எதிர்காலம் இருந்தாலும் இப்போது இந்தியாவிலுள்ள நிறைய வேலை நிறுவனங்களுக்கு உண்மை நிலவரம் தெரிய வந்து கொண்டிருக்கிறது.
வெளிநாட்டுப் படிப்புக்கு ஆசைப்பட்டு நிறையப் பேர் இங்குள்ள கல்லூரிகள் பற்றிய உண்மைத் தகவல்களைக் காணத் தவறி விடுகிறார்கள். முதலில் லண்டன் என்பது ஒரு நகரம் (தலை நகரம்), அது நாடு அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள். இங்கு வருபவர்கள் எல்லோரும் லண்டனில் இல்லை. United Kingdom (UK) என்பது இந்தியா போன்றது. அது 2 ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது (Great Britain (GB) & Nothern Ireland). இதில் Great Britain என்பது 3 ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது-England, Scotland & Wales. இதில் England 27 மாநிலமாகப் (Counties) பிரிக்கப்பட்டுள்ளது. இதில் லண்டனும் ஒன்று. உங்களது பிள்ளை வேல்ஸ் (Wales) என்னும் இடத்தில் படித்தால் அவர் லண்டனிலிருந்து ஏறக்குறைய 208 மைல்களுக்கு அப்பால் உள்ளார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே எப்போதோ உங்களுடன் படித்த அல்லது வேலை செய்த ஒருவர் இப்போது லண்டனில் இருக்கிறார், ஏதாவது அவசரம் என்றால் அவர் என் மகளைப் பார்த்துக் கொள்வார் என்பதைத் தயவு செய்து மறந்து விடுங்கள். Imperial College என்பது உலகில் சிறந்ததொரு பாரம்பரியமிக்க ஒரு கல்லூரி. இங்கு படிக்க வேண்டுமெனில் நீங்கள் மிகச் சிறந்த புத்திசாலியாக இருக்க வேண்டும். காசு கொடுத்து இடத்தை வாங்க முடியாது. இங்கே ஒரு சிறு பகுதி Overseas Students-காக ஒதுக்கப்படுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலிருந்து வரும் மாணவர்கள் அதிக புள்ளிகளையும் அதே நேரம் பணவசதி செய்யக் கூடியவர்களாகவும் (Course Fees min £10k/year) இருக்க வேண்டும். ஆனால் எங்கோ ஒரு மூலையில் ஒரு பெட்டிக் கடை போன்ற ஒரு கட்டடத்திற்கு Imperial University என்று பெயர் வைத்து அதை Register செய்து அதை இந்தியாவில் விளம்பரப்படுத்த அங்கிருந்து மாணவர்கள் ஒரு பெரும் தொகையைக் கொடுத்து இங்கு வருகிறார்கள். Imperial College-ம் Imperial University-ம் ஒன்று அல்ல என்பது இங்கு வந்த பின்பு தான் நிறையப் பேருக்குத் தெரிய வரும். ஆனால் இதை இவர்கள் தமது பெற்றோர்களுக்குச் சொல்வதில்லை. ஏனெனில் வெளிநாட்டில் படித்த மாப்பிள்ளை அல்லது பெண் என்ற அலங்காரமான வார்த்தை அவர்களின் கல்யாணப் பேச்சின் நேரம் ஒரு நல்ல வரனைத் தேடித் தரலாம். இப்படிப்பட்ட இடங்களில் மாணவர்கள் களவு செய்தாவது வாழலாம் என்ற Survial Technique கற்றுக் கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் அமைகிறது. இதில் ஈடுபட்டு இலகுவாக காசு சம்பாதிக்கும் எந்த ஒரு மாணவனும் படிக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. இப்படியான கல்லூரிகள் இப்போது இங்கே கண்டு பிடிக்கப்பட்டு மூடப்படுகின்றன.
"என்னுடன் வேலை பார்ப்பவரின் மகன் வெளிநாட்டில் படித்துக் கொண்டே வேலை பார்த்து வீட்டுக்கு நிறையப் பணம் அனுப்புகின்றான். ஆனால் நீ அது போல் அனுப்புவதில்லையே" என்று எத்தனை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கேட்கிறார்கள். மகளோ அல்லது மகனோ வெளிநாட்டில் படிக்கின்றார்கள் என்ற பெருமையில் நீங்களும் இங்கிருந்து ஏதாவது வாங்கி அனுப்புவார்கள் என்று ஆசைப்படப் போய் அவர்களும் iPad, iPhone, Mac book, பணம் என்று தொடர்ந்து அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்குரிய பணம் எவ்வாறு அவர்களுக்குக் கிடைக்கிறதென்று நீங்கள் யாராவது அவர்களைக் கேட்கிறீர்களா? Bank frauds, Fake graduate Certificates, Fiddling Exams, Selling Drugs, Credit card frauds, Sign up for mobile phone line rentals or sign up for monthly instalments laptops/Electronic items, Money Laundering, Fake documents producing, Cheating tax system, Cheting Minimum wages system, Cheting Home Office, Cheap Prostitution, etc. இவற்றைச் செய்பவர்களில் இந்திய மாணவர்களின் பங்கு மிக அதிகம். இதில் ஆண், பெண் இருவரும் ஈடுபடுகிறார்கள். மாதம் இவ்வளவு என்று ஒரு குறிப்பிட்ட தொகையை Line Rental-ஆகக் கட்டினால் உங்களுக்கு இலவசமாக Mobile Phone கிடைக்கும். Line Rental-இன் தொகையைப் பொறுத்து எந்த அளவு விலை கூடிய Mobile Phone என்பது முடிவாகும். இதற்கு சில இந்திய மாணவர்கள் பதிந்து Phone-ஐ எடுத்து விட்டு மாதத் தொகையைக் கட்டாமல் அந்த விலாசத்தை விட்டு இன்னொரு இடம் போய் விடுவார்கள். இதனால் அவர்கள் Line Rental நிறுத்தப்பட்டாலும் Phone அவர்களிடமே இருக்கும். இதற்கு இன்னொரு Sim Card அல்லது Line Rental ஐப் போட்டோ அல்லது இதை இந்தியாவுக்கு யாருக்காவது அன்பளிப்பாகவோ அனுப்புவார்கள். இதே போல் தான் DSLR Cameras, Video Cameras, Laptops especially Mac Book எல்லாம் மாதாந்திரம் கட்டுவது போல் எடுத்து விட்டு அந்த விலாசத்தை விட்டு ஓடி விடுவார்கள். இங்கு வரும் அதிகமான மாணவர்கள் நிரந்தரமாக ஒரு விலாசத்தை வைத்துக் கொள்ளாதது ஏன் என்று இப்போதாவது புரிகிறதா?
பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் பெற்றோரிடம் ஒவ்வொரு சதமும் கேட்டு வாங்கி வளர்ந்த சில பெண்கள் இங்கு வந்ததும் கேட்பார் யாருமில்லாத நிலையில் கையில் நிறையக் காசுடன் இது தான் சொர்க்கம் என்னும் ஒரு மனப்பான்மைக்கு வந்து விடுகிறார்கள். நிறைய மாணவர்களுக்கு இங்கு வந்ததும் கல்லூரி போக முதலே ஒரு Boy friend/ Girl friend கண்டிப்பாகத் தேவை. அநேகமான மாணவர்கள் Living together ஆகத் தான் வாழுகிறார்கள். Friendship with Benefits. Night Clubs வாசல்களில் சில இந்திய இளம் பெண்களை நெற்றில் பொட்டுடன், இரட்டை ஜடை பின்னலுடனும் காணலாம். இப்போது தான் இந்தியாவிலிருந்து வந்துள்ளார்கள் என்பது அவர்கள் வெளித் தோற்றத்தில் தெரியும். Restaurants, Bar-களில் இவர்கள் இலகுவாக மது அருந்துவதையும் புகை பிடிப்பதையும் கண்டு நானே நிறையத் தடவை வியந்துள்ளேன். இங்கு ஆண்கள்,பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு என்னும் அமைப்பிற்குப் (Family Planning & Seaxual Health Clinic) போகலாம். பாலின நோய்களைத் தடுப்பதற்காகவும் இளம் வயதில் குழந்தை பெறுவதைத் தடுப்பதற்காகவும் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இலவச அமைப்பு இது. இங்கே பாலியல் சம்மந்தமான வியாதிகள், அதற்குரிய மருத்துவ உதவி, ஆலோசனை, குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள், கருத்தடை சாதனங்கள் என்பன இலவசமாக வழங்கப்படுகின்றன. உங்களது பெயரோ அல்லது விலாசமோ இதற்குத் தேவை இல்லை. இந்தியாவிலுள்ள சில பெற்றோர்களுக்குத் தெரியுமா தமது மகள் இங்கே இலவசமாக என்ன பெற்றுக் கொண்டிருக்கிறாள் என்று?
இங்கே வரும் சில இளம் பெண் மாணவர்களைக் காதல் என்று பொய் சொல்லி நம்ப வைத்து, காதலில் விழ வைத்துப் போலிக் காதலனோ (இதில் முக்கியமாக இருப்பவர்கள் இந்திய சக மாணவர்கள்), இன்னொரு ஆணோ இவர்களை Hotel-க்குக் கொண்டு போய் இவர்களுக்குத் தெரியாமல் அங்கே நடப்பதை Video எடுக்கிறார்கள். இதை விடக் கேவலம் என்னவென்றால் இவர்களுக்கு நண்பன் அல்லது இன்னொரு நண்பி Soft Drinks-இல் போதைப் பொருளைக் கலந்து கொடுத்து இவர்களை Hotel-க்குக் கொண்டு போய் Group Sex செய்ய வைத்து Video எடுத்து இவற்றை Porn Market-இல் அதிக விலைக்கு விற்கிறார்கள். ஏன் இந்தியப் பெண்கள்? ஏனென்றால் ஆண், பெண் உறவு பற்றிய அறிவு இவர்களுக்கு அதிகம் இல்லை, இப்படிப்பட்ட காட்சிகள் வரும் படங்கள், தொலைக் காட்சி நிகழ்ச்சிகள், புத்தகங்கள் பற்றி எதுவும் அறிந்திராத,உடலில் செயற்கையான பூச்சுக்களோ அலங்காரமோ அதிகம் இல்லாத, வெட்கம், வெகுளித்தனம், எதுவும் அறியாத குழந்தை போன்ற ஒரு பெண் ஒரு ஆணுடன் தனிமையில் அந்தரங்கமாக இருப்பதைப் பார்ப்பது வெளிநாட்டில் நிறையப் பேரைக் கவருகிறது. இந்தியாவிலிருந்து வரும் பெண்கள் விடுமுறையைக் கழிக்க குடும்பத்தினருடன் சில மாதங்களோ அல்லது வேலை நிமித்தம் கணவருடன் வருவார்கள். ஆனால் மாணவர்களாகத் தனியே வரும் பெண்களிடம் தான் தனிமையை, பணக் கஷ்டத்தை உபயோகித்து தங்கள் யுக்தியை சில பேர் கையாளுகிறார்கள். தாங்கள் Video எடுக்கப்படுகிறோம் என்பது நிறையப் பெண்களுக்குத் தெரியாது. தெரிந்தாலும் பயத்தின் காரணமாக வெளியே சொல்வதில்லை. சில பெண்களின் விருப்பத்தின் பெயரிலும் இது நடை பெறுகிறது. இந்தியா போன பின் இம் மாதிரி Thrill ஆக ஏதாவது செய்து பார்க்கும் சுதந்திரம் இல்லாமல் போய் விடுமே என நினைத்து இங்கிருக்கும் வரையில் எல்லாவற்றையும் அனுபவித்துப் பார்க்க நினைக்கிறார்கள். தெரிந்தவர்கள் யாரும் இங்கே இல்லை, யாருக்கும் தெரிய வராது என்ற தைரியமும் இன்னொரு காரணம் .
இங்கு வரும் மாணவர்களின் இன்னொரு பிரச்சனை அவர்கள் இங்குள்ள உணவு வகைகளுக்கு மாறக் கஷ்டப்படுவது. அதிலும் மாமிசம் உண்ணாதவர்கள் (Vegetarian) அல்லது மிருகங்களில் இருந்து வரும் உணவை உண்ணாதவர்கள் (Vegan) பாடு மிகவும் திண்டாட்டம். இங்கு அனைத்து இடங்களிலும் ஆசிய நாட்டு உணவுப் பொருட்கள் கிடைக்காது. ஒரு சிலவற்றைத் தவிர மிகுதி விலை அதிகம். ஒரு கூட்டுக் குடும்பம் போல் ஒரு அறையில் அல்லது வீடு முழுக்க நிறையப் பேருடன் ஒன்றாகச் சமைத்து (ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு நாள் என்று சமையல் செய்யும் முறை இருக்கும்) உணவுச் செலவையும் பகிர்ந்து கொள்ளும் போது விலை அதிகமான உணவுப் பொருட்கள் உபயோகிப்பது தவிர்க்கப்படுகிறது. இதனால் அதிகமான மாணவர்கள் சாதம், தயிருடனே தங்கள் நாட்களைக் கழிக்கிறார்கள்.
விசாவைப் புதுப்பிக்க ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி கணக்கில் பல மாதங்கள் தொடர்ந்து காட்ட வேண்டும். இந்தக் குறிப்பிட்ட தொகையைத் தொடர்ந்து காட்டுவதற்கு பெற்றோரின் உதவி இன்றி எத்தனையோ மாணவர்கள் எவ்வளவு கஷ்டப் படுகிறார்கள் என்று எத்தனை பெற்றோர்களுக்குத் தெரியும்? சில மாணவர்கள் காசு கொடுத்து இங்கு வதிவிட உரிமை (Permanent Residency) அல்லது பிரஜா உரிமை (Natinality) உள்ள ஒரு பெண்ணையோ அல்லது ஆணையோ ரகசியமாகத் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள். இதன் மூலம் தங்களுக்கு வதிவிட உரிமை கிடைக்கும் மட்டும் சில பேர் இங்கே இருக்கிறார்கள். மற்றவர்கள் இருக்கும் வரை இருந்து விட்டு வதிவிட உரிமை எடுக்காமலேயே இந்தியா போய் வேறு யாரையும் திருமணம் செய்கிறார்கள். University-இலிருந்து வெளியேற்றினாலும் அல்லது படிப்பை முடிக்காது விட்டாலும் இது அவர்கள் இங்கே விசாவை நீடிக்க உதவுகிறது. ஒரு மாணவன் தன் விசா நிமித்தமாக ஒரு Lawyer-ஐப் பார்க்க வேண்டும் என்று சொன்னாலே அதன் அர்த்தம் விசாவில் ஏதோ களவு செய்யப் போகிறார் என்பது. ஏனெனில் ஒரு உண்மையான மாணவன் ஒரு வழக்கறிஞர் உதவி இன்றி நேரடியாக Home Office போய் விசாவை நீடிக்கலாம். இதனால் இங்கு Home Office அடிக்கடி Overseas Student Visa Terms & Conditions-ஐ மாற்றுகிறது.
நீங்களும் UK-இல் தானே படித்தீர்கள் என யாரும் வாதாடலாம். நான் வளர்ந்தது படித்தது எல்லாம் UK. ஆனால் எனது உறவினர்கள் எல்லோரும் இங்கே தான் உள்ளனர். வேலை செய்ய வேண்டுமென்ற கட்டாயம் எனக்கு இருக்கவில்லை. வீட்டிலிருந்து கல்லூரிக்குப் போகும் வசதி இருந்தது அல்லது படித்த பள்ளிக்கூடம் அல்லது கல்லூரியினருகே எனக்காக ஒரு வீட்டை வாங்கித் தரும் வசதி என் பெற்றோரிடம் இருந்தது. பெற்றோர் தவிர யாரிடமும் சேர்ந்து வாழவோ, தங்கி வாழவோ வேண்டிய நிலை எனக்கு இருக்கவில்லை. UK-இல் வளரும் மகளுக்குப் படிக்கும் நேரம் தவிர்த்து மிகுதியாக அதிக வெட்டி நேரம் இருந்தால் தான் தேவை இல்லாத விஷயங்களில் மனம் செல்லும் என்ற காரணத்திற்காக என் பெற்றோர் இசை, ஓவியம், தமிழ், நடனம் என்று ஒவ்வொரு வகுப்பிற்கும் மாறி மாறி என்னைக் கொண்டு திரிந்தார்கள். நான் நண்பர்களுடன் செலவழித்த நேரத்தை விட என் பெற்றோர்களுடன் செலவழித்த நேரம் மிக அதிகம். இவை எல்லாவற்றையும் தாண்டி நான் சீரழிந்து போனால் கூட அதை உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு என் பெற்றோரிடம் இருக்கின்றது. சில விஷயங்களைக் கூச்சப்படாமல் எனக்கு விளக்கும் தைரியம் அவர்களிடம் இருக்கின்றது. இதே மனத் தைரியம், எதையும் உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் மன நிலை உங்களிடமும் உள்ளதா? அந்தப் பெண், இந்தப் பெண் UK-இல் தானே இருக்கிறாள் என்று நினைப்பதை விட உங்கள் பெண்ணால் இருக்க முடியுமா என்று யோசித்து முடிவெடுங்கள். வளர்ந்த விதம், குடும்பச் சூழ்நிலை, வசதி நிலை என்பன ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும்.
இங்கு வந்து படித்து விட்டுப் போகும் நிறைய மாணவர்கள் கல்யாணப் பேச்சு நேரத்தில் வெளிநாட்டில் போய் படித்த பெண் வேண்டாம் என்று சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அதற்குக் காரணம் அங்கிருந்து வரும் பெண்கள் இங்கு என்ன செய்கிறார்கள் என்று நிறையப் பேருக்குத் தெரியும். இங்கிருந்து இந்தியா போகும் ஒரு ஆணை விட ஒரு பெண் தான் திருமணம் என்னும் பந்தத்தில் அனுசரித்துப் போக முடியாமல் கஷ்டப்படுகிறாள். நான் மேலே சொன்ன Infosys ஊழியரான ஆந்திராவைச் சேர்ந்த நீலிமாவின் (Neelima Yeruva) தற்கொலையை கள்ளத் தொடர்பு தான் காரணம் என்று எல்லோரும் இலகுவாக முடித்து விட்டார்கள். மிகவும் படித்த, அழகான, ஒரு இளம் பெண் , இந்தியாவில் நல்லதொரு வேலையில், கணவன், இரண்டு குழந்தைகள் இருக்குமாறு தற்கொலை செய்து கொண்டதற்குக் கள்ளத் தொடர்பு மட்டும் தான் காரணமா? அந்தப் பெண் அமெரிக்கா போகாமல் இருந்திருந்தால் இன்று இந்தியாவில் சந்தோசமாகத் தனது குடும்பத்துடன் இருந்திருப்பாரே. ஏற்கனவே நல்ல சம்பளம் வந்தும் அதையும் மீறி இன்னும் உழைப்பதற்காக கணவனையும், இரண்டு குழந்தைகளையும் பிரிந்து தெரியாத ஒரு ஊருக்குப் போக வைத்ததற்கு யார் காரணம்? போன இடத்தில் மன அழுத்தம், தனிமை காரணமாக இன்னொரு உறவை தேட வைத்ததற்கு அந்தப் பெண் மட்டும் தான் காரணமா? மண வாழ்க்கையில் இருக்க முடியாமல், தேடிய புது உறவையும் நீடிக்க முடியாமல் அந்தப் பெண் தற்கொலை செய்ததற்கு அவள் மட்டும் தான் காரணமா? பெற்றோரினதும் குடும்பத்தினரதும் பேராசையும், ஒரு பெண்ணின் மனதைப் புரிந்து கொள்ளாத தன்மையும், வெளி உலகு பற்றி அதிக அளவு அறிந்து கொள்ளாத உங்கள் மடமையும், சமுதாயம், மூடப் பழக்கத்தில் மூழ்கிக் கிடக்கும் உங்கள் நம்பிக்கையும் தான் காரணம். இன்று ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் படிப்பிலும் வேலையிலும் சிறந்து விளங்குகிறார்கள். எத்தனையோ பெண்கள் இந்தியாவின் பெயரை விண்வெளித் துறையிலும் நிலை நாட்டுகிறார்கள். கிடைக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முன்னேறுதல் வரவேற்கத்தக்கதே. ஆனால் வெளிநாடு ஒன்றில் ஒரு துறையில் சிறந்து விளங்கும் இந்தியப் பெண்ணின் அறிவும், தைரியமும், கட்டுப்பாடும் உங்கள் பெண்ணிடமும் உள்ளதா என்று ஒரு தடவையாவது யோசியுங்கள்.
நான் மேலே சொன்னவை இங்கு வரும் அனைத்து இந்திய மாணவர்களுக்கும் பொருந்தாது. ஒரு சில மாணவர்கள் நன்றாகப் படித்து எந்த ஒரு பிரச்சனைகளிலும் ஈடுபடாமால் ஒழுங்காக இந்தியா திரும்பி வருகிறார்கள். ஆனால் இங்கு வரும் அதிகமான மாணவர்களின் நிலை இது தான். மற்றவர்களுக்குப் பெருமையாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக உங்கள் மகளை இங்கு அனுப்பாமல் இங்கு வரும் ஒவ்வொரு மாணவரும் சந்திக்க நேரிடும் நல்லது கெட்டத்தை ஒரு முறை அலசிப் பாருங்கள். அவற்றை உங்கள் மகளால் தனியே சமாளிக்க முடியுமா? அப்படிச் சமாளிக்கும் படி நீங்கள் அவளை வளர்த்துள்ளீர்களா? உங்கள் மகள் இந்தியா வரும் போது அவள் மனம், உடை, நடையில் கண்டிப்பாக ஒரு மாற்றம், அதுவும் மேலைத் தேச மாற்றம் இருக்கத் தான் போகிறது. அதை நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் அவளுக்கு நீங்கள் பார்க்கும் உங்கள் சமய, சம்பிராதய கோட்பாடுகளைக் கடைப் பிடிக்கும் மாப்பிள்ளையால் இந்த மாற்றத்தை உணர்ந்து அனுசரித்துப் போக முடியுமா? அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளுவார்களா? அவர்கள் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் உங்கள் மகளின் மன நிலை எப்படி இருக்கும்? இதில் வேடிக்கை என்னவென்றால் இங்கு வரும் சில மாணவர்கள் தாங்கள் இருவரும் திருமணம் செய்யப் போவதில்லை ஆனால் இங்கு இருக்கும் வரை கணவன், மனைவி போல் வாழுவோம் என்னும் கருத்தில் மிகவும் ஒற்றுமையாகவுள்ளனர். இருவரும் படித்து முடித்துத் திரும்ப இந்தியா போய் வேறு யாரையோ திருமணம் முடிக்கிறார்கள். ஆனால் அவர்களின் நட்பு Social Networks, email, தொலைபேசி மூலம் தொடர்கிறது. வேலை நிமித்தமாக வெளியூர் போக வேண்டி வந்தால் அங்கே அவர்கள் இருவரும் திரும்பவும் சந்தித்து தமது மண வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஒரு உறவைத் தொடர்கின்றனர்.
பெற்றோர்களே !! அநேகமான பெண்கள் இந்திய சூழலில் கட்டுப்பாடாக வளர்ந்து வெளிநாடு போய் கஷ்டப்பட்டு, அவமானப்பட்டு ஒரு மாதிரியாக அச் சூழலுக்குப் பழகி திரும்பவும் இந்தியா வரும் போது..........அவள் ஒரு இந்தியனாகவும் இல்லாமல் ஒரு வெளிநாட்டவராகவும் இல்லாமல் இரு வேறு கலாச்சாரங்களிடையே சிக்கித் தத்தளித்துத் தான் உங்களை எதிர் கொள்ளப் போகிறாள். அந்தப் பெண்ணை உங்கள் அந்தஸ்த்துக்காக நல்லவன் என்னும் பெயரில் ஒரு இந்தியக் கலாச்சாரம் கொண்ட பையனிடம் ஒப்படைக்கப் போகிறீர்கள். எல்லாம் வெளிநாடாக இருக்க வேண்டும் ஆனால் அவள் மணம் முடிப்பவர் மட்டும் ஒரு இந்தியனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். உங்கள் விருப்பத்திற்காக வெளிநாடு வந்து மன அழுத்தத்தில் படிக்க முடியாமல் பரீட்சையில் Fail ஆகி அதை உங்களிடம் சொல்ல முடியாமல் படித்து முடித்து விட்டேன் என்பதை உணர்த்த யார் யாருக்கோ பல் இளித்து, தன்னைக் கொடுத்து Fake Certificate வாங்கி, உங்கள் பணச் சுமையை தாங்குவதற்காக எங்கெங்கோ வேலை செய்து, யார் யாருடனோ அறையைப் பகிர்ந்து, உங்களின் iPhone, Mac Book மோகங்களுக்காக கள்ளம் செய்து, போதைப் பொருள் விற்று, தன்னை விற்று, நொந்து, நூலாகி, மனதளவில், உடையளவில், தோற்றத்தில் எல்லா மாற்றங்களையும் கொண்டு வந்து திரும்பவும் ஒரு இந்தியக் கலாச்சாரப் பெண்ணாக வாழுவது எவ்வளவு கஷ்டம் என்று யாராவது உணர்ந்தீர்களா? இவற்றை எல்லாம் தவிர்த்து அல்லது சமாளித்து நல்லபடியாக உங்கள் மகள் படித்து முடிப்பாளா என்பது எனக்குத் தெரியாது. பெற்றோராகிய உங்களுக்குத் தான் தெரியும். இங்கு வருபவர்கள் எல்லோரும் சீரழிவதில்லை. ஆனால் சீரழிந்து போனவர்கள் பட்டியலில் உங்கள் மகள் வராமல் இருப்பது உங்கள் வளர்ப்பிலும், உதவியிலும், கண்காணிப்பிலும், புரிதலிலும் தான் உள்ளது. சீரழிவுக்கு நாட்டைக் காரணம் காட்டாதீர்கள். நாடு என்று தனியே ஒன்று இல்லை. வீடுகள் சேர்ந்தது தான் நாடு. அதில் உங்கள் வீடும் ஒன்று என்பதை உணருங்கள்.
எனது உண்மையான கருத்து என்னவெனில் உங்களால் காலத்திற்கு ஏற்ப மாற முடியவில்லையெனில் உங்கள் அந்தஸ்த்து, சம்பிரதாயம், சமுதாயத்தில் உள்ள பெயர் இவை தான் உங்களுக்கு முக்கியம், கட்டுக் கோப்பாக வளர்ந்த பெண், அவள் புதிய சூழலைச் சமாளிப்பாளா என்ற சந்தேகம் இருந்தால் உங்கள் பெண்ணை வெளிநாட்டுக்குத் தனியே அனுப்பாமல் இந்தியாவிலேயே வளருங்கள். உங்கள் வருமானம் ஒரு பெண்ணை வெளிநாட்டில் அனுப்பிப் படிக்க வைக்கும் நிலையில் இல்லை என்றால் உங்கள் பெண்ணை இந்தியாவிலேயே மேல் படிப்புப் படிக்க வையுங்கள். ஒரு பெண் உங்களுக்கு மகள் என்றாலும் அவள் ஒரு ஜடம் அல்ல, சந்தர்ப்பங்களும் சூழ்நிலையும் அவளைத் தவறு செய்ய வைக்கலாம் என்ற உண்மையை உணருங்கள். இதற்கு மேலும் அவள் வெளிநாடு வர வேண்டும் என்று நினைத்தால் திருமணம் முடித்து வைத்துக் கணவருடன் அனுப்பி வையுங்கள். இருவரும் சேர்ந்து ஒன்றாகப் படிக்கட்டுமே. உங்களது நண்பரின் மகனால் இங்கே ஒரு அறையில் 6 பேருடன் தங்க முடிகிறதே, ஏன் என் மகளால் முடியாது என்று விதண்டாவாதம் பேசாதீர்கள். என்ன தான் ஆணும் பெண்ணும் சமம் என்று நாம் பெண்ணியம் பேசினாலும் ஒரு ஆணால் இங்குள்ள நிலைமையைச் சமாளிக்க முடிவது போல் ஒரு பெண்ணால் முடிவதில்லை. ஒரு ஆண் மது அருந்துவதை ஏற்றுக் கொள்ளும் உங்கள் சமுதாயம் ஒரு பெண் மது அருந்துவதை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படியான ஒன்றை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு காலம் வரும் போது ஒரு ஆணுக்கு எனது பெண் சமம் என்று தாராளமாகச் சொல்லுங்கள்.
இங்கே எவ்வளவோ மாணவர்கள் எத்தனையோ நாடுகளிலிருந்து வருகிறார்கள். அவர்கள் இந்த அளவுக்கு இங்கே கஷ்டப்படுவதில்லை. ஏனெனில் அவர்களது கலாச்சாரம் வேறு. அது UK-இன் கலாச்சாரத்துடன் ஓரளவு ஒத்துப் போகிறது. உங்கள் பெண்ணின் எதிர் காலம், அவளின் சந்தோசம் தான் முக்கியம், எமது காலம் முடிந்து விட்டது, வரும் காலத்தை அவர்களின் வாழ்க்கை முறையை நாம் உணர்ந்து அனுசரித்துப் போவோம் என்ற மனப்பான்மை, உங்கள் பிள்ளைகளில், அவர்கள் நடத்தையில் நம்பிக்கை இருந்தால் தாராளமாக வெளிநாட்டுக்கு அனுப்பி வையுங்கள். தனிமையில், மன அழுத்தத்தில் இருக்கும் உங்கள் மகளுக்கு ஒரு வெளிநாட்டவர் ஆறுதல் அளித்து அவரை உங்கள் மகள் காதலித்தால் அதை எதிர்த்து, தடுத்து, உடனே இந்தியாவிற்கு வரவழைத்து எதுவும் தெரியாத ஒரு அப்பாவிக்கு திருமணம் செய்து வைத்து இருவரின் வாழ்க்கையையும் வீணாக்காமல் உங்கள் மகளின் விருப்பத்தை உணர்ந்து எதற்கும் நீங்கள் தயாராக இருந்தால் தாராளமாக உங்கள் மகளை அனுப்பி வையுங்கள். உங்கள் மகளின் மேற்படிப்புக்கு முதல் நீங்கள் உங்களுக்கு தற்கால இளைய சமுதாயத்தின் வாழ்க்கை முறை பற்றிப் போதிப்பது மிகவும் முக்கியம் என நான் நினைக்கிறேன். ஏனெனில் உலகம் என்பது உங்கள் குடும்பம், உங்கள் வீடு மட்டும் அல்ல. அதையும் தாண்டியது !!
PS: இக் கட்டுரையின் நோக்கம் இந்தியப் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை வெளி நாட்டுக்கு அனுப்பாமல் இருக்க வேண்டும், தமது பிள்ளைகளைப் பற்றிப் பயப்பட வேண்டும், அனைத்து இந்திய மாணவர்களும் இங்கே ஒழுங்காகப் படிப்பதில்லை, இந்திய மாணவர்களுக்கு வெளிநாட்டில் ஒரு வாழ்க்கை கிடைக்காது என்று சொல்வதல்ல. உங்கள் பிள்ளை ஒரு சரியான கல்லூரியைத் தேர்ந்தெடுத்து, தான் வந்த நோக்கத்தை மட்டும் கருத்தில் கொண்டு, தனது தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, விதிகளுக்குக் கட்டுப்பட்டு, அத்துடன் உங்களின் கண்காணிப்பும் ஆதரவும் இருந்தால் கண்டிப்பாக இங்கே வெல்லலாம் என்பது உண்மையே. ஆனால் இது அனைத்து இந்திய மாணவர்களிடமும் நடக்கின்றதா என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்பதே இக் கட்டுரையின் நோக்கம். விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்திற்கு எதை அனுப்ப முன்பும் அக் கிரகம் பற்றி முடிந்த வரை தகவல் சேகரித்து, பரிசோதனைகள் செய்து தரை தொட்ட பின்னும் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். அங்கே ஒரு பிரச்சனை வந்தால் தங்களால் முடிந்த வரை சரி செய்ய முயலுகிறார்கள். ஆனால் நாம் தான் ஒரு ஊர் பற்றி எதையும் அறியாமல், அங்குள்ள நிலவரம் தெரியாமல் கண்ணை மூடிக் கொண்டு எமது பிள்ளைகளை விமானம் ஏற்றி விட்டு அவர்கள் நல்லபடியாகத் திரும்பி வருவார்களென நினைக்கிறோம் . அநேகமான இந்தியப் பெற்றோர்களுக்கு வெளிநாடுகளும் செவ்வாய் கிரகமும் ஒன்று தான்.
editor.kadavuleh:
இது ஒரு முன் எச்சரிக்கை கட்டுரை மட்டுமே!!! பெற்றோர்கள் தெளிவாக தகவல்களை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல் பட உதவும் நோக்கத்தில் மட்டுமே இந்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது...
Precaution is Better than Cure !!!
Comments
Post a Comment