Skip to main content

பாவங்களில் இருந்து விமோச்சனம் தரும் 'பாப மோசனி' ஏகாதசி ...

Protected by Copyscape
'பாபமோசனி'  / 'பாப மோச்சனி' ஏகாதசி விரத மகிமை ...

நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட.... 




'சைத்ர மாதம்', (March/April)  தேய்  பிறையில் (கிருஷ்ண  பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "பாப மோசனி ஏகாதசி"   (Paba Mochani   Ekadasi) என்று   அழைக்கப் படுகின்றது. 

பாப மோச்சனி  ஏகாதசி பற்றி 'பவிஷ்ய உத்தர புராண' விளக்கம்: 
ஸ்ரீ கிருஷ்ணரிடம், யுதிஷ்டிர மஹராஜ் கேட்கிறார்...ஓ பரந்தாமா, சைத்ர மாதத்தில் தேய் பிறையில் வரக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன மற்றும் அதன் மகிமை என்ன என்று விவரியுங்கள் என்று கேட்கிறார். 

ஸ்ரீ கிருஷ்ணர்  கூறுகிறார், ஓ அரசர்களில் சிறந்தவனே, 
சைத்ர மாத தேய்பிறையில்  வரும் ஏகாதசி 'பாப மோச்சனி  ஏகாதசி' என்று அழைக்கப்படும். பாவங்களில் இருந்து விமோச்சனம் அளிப்பதால் அது பாப மோச்சனி ஏகாதசி ஆயிற்று; அதன் பெருமைகளை கூறுகிறேன் கேள் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதை நாம் இங்கு விவரிக்கின்றோம்...

இந்த ஏகாதசி விரதத்தினை  முறையாக கடைபிடிப்பவர்கள் அனைவரும், தான் செய்த  அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவர், அதன் பின்பு மோக்ஷத்தை அடைவர்.

முன்பு, கந்தர்வர்களின் தலைமை இசை வித்தகனான 'சைத்ரதா' தலைமையில் அனைத்து இசை வல்லுனர்களும் மற்றும் மனதை மயக்கும் நடன மங்கைகளும் ஆடிப்பாடி, ஒரு வனத்தில் இந்திரனை  மகிழ்வித்துக்  கொண்டிருந்தனர். அந்த வனத்தில் சிறிது தொலைவில்  பல்வேறு ரிஷிகளும், முனிவர்களும் தவமிருந்து கொண்டிருந்தனர். 

சிறிது தொலைவில் இருந்த, பல வருடங்கள் தொடர்ந்து தவம் செய்து அற்புத சக்திகளை பெற்ற, பார்ப்பதற்கு மிகவும் இளமையாக இருக்கக்கூடிய 'மேதாவி' எனும் முனிவர் ஒருவரும் அங்கு தவம் செய்து கொண்டிருந்தார். 
நடன மங்கைகளில், மிகவும் அழகு வாய்ந்த 'மஞ்சுகோஷா' எனும் மங்கை காண்போர் அனைவரையும் வசீகரிக்கும் பொலிவு பெற்றவளாக விளங்கினாள்.  மற்ற அனைத்து நடன மங்கைகளும் தவத்தில் இருக்கும் அந்த முனிவரின் அருகில் செல்லத் தயங்கிய பொழுது 'மஞ்சுகோஷா' மட்டும் அவரது அருகில் செல்ல முயன்றாள். 
இருப்பினும் அவரது மனம் முழுவதும் தவத்திலேயே மூழ்கி இருந்ததால், அவரது அருகில் 'மஞ்சுகோஷா'வும்  நெருங்க முடியவில்லை. தவக்கனல் தகித்து கொண்டிருந்தது. இதன் காரணமாக சற்று தொலைவில் இருந்தே, பாடல் பாடி, ஆடல் செய்து நறுமண மலர்களை அவருக்கு அருகில் போட்டு அவரது தவத்தை கலைக்க முயன்றாள். தொடர்ந்து பல்வேறு முயற்சிகளுக்கு பின் தனது கண் திறந்து பார்த்தார் 'மேதாவி'. 

அப்பொழுது, தனது தவத்தை கலைத்ததற்கு கோபப்பட வேண்டிய 'மேதாவி' முனிவர் அதற்கு மாறாக தனது கண் முன் நிற்கும் அழகே வடிவான 'மஞ்சுகோஷா' வின் மேல் காதல் கொள்கிறார். அவளை ஒரு நாள் தனது குடிலில் தங்கிவிட்டு செல்லுமாறு கேட்கிறார். அவளும் முனிவருடன் தங்குகிறாள். 'மேதாவி' முனிவர்க்கு காதல் மயக்கம்  மற்றும் மோக மயக்கம் வந்ததால், எத்தனை நாட்கள் கடந்தது என்று கூட தெரியாத அளவுக்கு இருந்தார். 
ஆனால், ஆண்டுகள் பல கடந்து விட்டன. அதனால், மஞ்சுகோஷா தனது இருப்பிடம் செல்ல தீர்மானித்து முனிவரிடம் மீண்டும் விடைபெற முயல்கிறாள். ஆனால், முனிவரோ, நீ வந்து ஒரு நாள் தானே ஆகிறது, அதனால் இன்னும் ஒரு நாள் இருந்து விட்டு செல் என்கிறார். 
அப்பொழுது, மஞ்சுகோஷா சற்று கோபமாக, முனிவரே, நான் வந்து பல வருடங்கள் ஆகிறது, இன்னும் ஒரு நாள் இருக்கச்சொல்லி வற்புறுத்துகிறீர்களே, இது தங்களுக்கே நியாயமா என்று கேட்கிறாள்.?
'மேதாவி' முனிவர்க்கு அதன் பின்னரே தனது சுயநினைவு வருகிறது. அடடா, இத்தனை ஆண்டுகள் மோகத்தின் காரணமாக ஒரு பெண் பின்னால் சுற்றி தனது தவ வலிமையை குறைத்து விட்டோமே என்று வருந்தினார்.
தனது கோபத்தின் காரணமாக 'மஞ்சுகோஷா'-வை, பிசாசாக மாறும்படி சாபம் இடுகிறார்.  

மஞ்சுகோஷா தனது நிலையை  எடுத்து  சொல்லி , தான் மட்டுமே இதற்கு காரணம் அல்ல என்று முனிவரிடம் வேண்டி, தனக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை போக்க உபாயம் ஒன்றை கூறுங்கள் என்று கேட்கிறாள்.
முனிவரும், சிறிது தியானத்தில் ஆழ்ந்து அதன் பின்னர், ஓ பெண்ணே, சைத்ர மாத கிருஷ்ண பட்சத்தில் வரும் 'ஏகாதசி' விரதத்தினை முழுவதும் கடைபிடிப்பாயாக, அதன் மூலம் உனக்கு சாப விமோச்சனம் கிடைக்கும் என்று கூறி அவளை விட்டு செல்கிறார்.
அதன் பின்னர், 'மேதாவி' முனிவருக்கு தான் செய்த தவறும்  விளங்கிற்று. அதற்கு பிராயச்சித்தம் தேட எண்ணி 'ச்யவன' முனிவரிடம் தான் செய்த தவறை கூறி வருந்தி உபாயம் கேட்க, 'ச்யவன' முனிவரும், 'மேதாவி' முனிவர் மஞ்சுகோஷாவிற்கு கூறிய அதே சைத்ர மாத ஏகாதசி அன்று முழு உபவாசம் இருந்து அன்று இரவு உறங்காமல் பகவான் ஸ்ரீ விஷ்ணு நாமத்தினை கூறி பஜனை செய்து விரதத்தினை கடைபிடிக்கும் படி அறிவுறுத்தினார். 

அதன் பின்னர்,
மஞ்சுகோஷாவும் விரதம் இருந்து தனது பாவம் நீங்கப்பெற்று பிசாசாக பிறக்க இருந்ததை தடுத்து சுக வாழ்வு கிடைக்கப்பெற்றாள். 
அதேபோல், முனிவர் 'மேதாவியும்' ஏகாதசி விரதம் இருந்து தனது பாவம் நீங்கப்பெற்று விஷ்ணுவின் பாத கமலங்களை அடைந்தார்.

இவ்வாறு, பாவங்கள் நீங்கப்பெறும் / பாவங்களுக்கு விமோச்சனம் தரும் ஏகாதசி 'பாப மோச்சனி ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது, என்று பவிஷ்ய உத்தர புராணம்' கூறுகிறது.  

இந்த விரத பலனை படிப்பவர்கள் மற்றும் விரத பலனை பிறருக்கு தெரியப்படுத்துபவர்கள், என அனைவரும் ஒரு பசுவினை ஒரு அந்தணருக்கு  தானம் செய்த பலனைப் பெறுவார்கள்.   

ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும்  'பாப மோச்சனி ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை: 

  • வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அருகில் உள்ள பெருமாள் கோவில் சென்று பெருமாளை ஸேவிக்கலாம். 
  • இவை எல்லாவற்றையுமோ அல்லது முடிந்த ஏதேனும் ஒன்றையோ செய்யலாம். இதில் எதுவுமே முடியவில்லை என்றால், இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...    
விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'கோ' தானம்  செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.  

Editors Note:

(....இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு பதிவு செய்ய நினைக்கிறோம்...
நமது 'தாமிரா தர்ம ரக்ஷண ஸபா' மூலமாக கலியுகத்திற்கு ஏற்ற வகையில் நமது குழு உறுப்பினர்களுக்கு இப்போதைய தண்டோரா மூலம், { Social Media like Whatsapp, Telegram, Facebook  etc, etc...}  ஒவ்வொரு ஏகாதசிக்கும்  முதல் நாள் தசமி திதி அன்று 
 'ஏகாதசி விரதம்' பற்றி ஒரு நினைவூட்டலை நாம் செய்து வருகின்றோம்...)  

'ஒரு துளி ஆன்மீகம்' Whatsapp குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும்.....  (BL01)


ஓம் நமோ நாராயணாய...
ஓம் நமோ வெங்கடேசாய...

பின் குறிப்பு:  
நாம் முன்பே பலமுறை கூறியுள்ளது போல், உபவாஸம் இருப்பது என்பது உடலுக்கும், மனதுக்கும் மிகவும் நல்லது என்ற போதிலும், தற்போதைய "கலி யுகத்தில்" இது அவரவர் தனிப்பட்ட உடல் நலனை பொறுத்தது ஆகும்.

வயோதிகர்கள், நோய் வாய் பட்டவர்கள், உடல் நிலை ஒத்துழைக்காதவர்கள் ஏகாதசி விரத பலனை அடைய, ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டும் அரிசி உணவை தவிர்த்து வேறு உணவுகளை (அவல், அல்லது பழங்கள் போன்ற) அவரவர் தேவைக்கு ஏற்ப எடுத்துக்  கொண்டு,  பகவான் நாமாவை ஜெபித்து கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு ஏகாதசி விரத மகிமையை மற்ற அன்பர்களுக்கும்   தெரியப்படுத்தலாம்.  

ஹரி ஓம்...

உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...

நன்றி ...


ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா, 
திருநெல்வேலி... 

Comments

  1. நன்றி வாழ்க வளமுடன்

    ReplyDelete

Post a Comment

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status