Skip to main content

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை... 



முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு  அடி எடுத்துக்கொடுத்து,  
அருணகிரிநாதர் பாடிய பாடல் இது...
இந்தப்பாடல் 'அருணகிரிநாதர்' எனும் திரைப்படம் மூலமாகவும், பாடலின் தாள நடை காரணமாகவும் மிகவும் பிரபலமாகிய பாடல்.

ஆனால், அதையெல்லாம் விட அப்பாடலின் பொருளும்  மிக அருமையானது.  நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...இந்த இனிய நாளில்  அதனை தெரிந்து கொள்வோம்... 

இதோ, அருமையான 'திருப்புகழ்' பாடல், அதனை தொடர்ந்து அதற்கான பொருள் விளக்கமும்... 


முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

பொருள் விளக்கம்... 

முத்தைத்தரு பத்தித் திருநகை ... வெண்முத்தை நிகர்த்த, அழகான
பல்வரிசையும் இளநகையும் அமைந்த

அத்திக்கு இறை ... தேவயானை தேவியின் தலைவனே,

சத்திச் சரவண ... சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே,

முத்திக்கொரு வித்துக் குருபர ... மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு விதையாக விளங்கும் ஞான குருவே,

எனவோதும் முக்கட்பரமற்கு ... என்று துதிக்கும் முக்கண்ணர் பரமசிவனார்க்கு,

சுருதியின் முற்பட்டது கற்பித்து ... வேதங்களுக்கு முதன்மையான ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து,

இருவரும் ... (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய இருவரும்,

முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண ... முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிய நின்றவனே,

பத்துத்தலை தத்தக் கணைதொடு ... ராவணனுடைய பத்துத் தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு,

ஒற்றைக்கிரி மத்தைப் பொருது ... ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக் கொண்டு பாற்கடலைக் கடைந்து,

ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக ... ஒரு பகற்பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி,

பத்தற்கு இரதத்தைக் கடவிய ... நண்பனாகிய அர்ச்சுனனுக்குதேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ... பசுமையான
நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே ... பரிவோடு என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ?

(இப்பாடலின் பிற்பகுதி முருகப்பெருமான்  அசுரர்களுடன் செய்த போரினை விரிவாக  விளக்குகின்றது).

தித்தித்தெய ஒத்தப் பரிபுர ... தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்துசிலம்புகள் அணிந்த

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி ... நாட்டியப் பாதங்களை வைத்து காளிதேவி

திக்கொட்க நடிக்க ... திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம் செய்யவும்,

கழுகொடு கழுதாட ... கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்,

திக்குப்பரி அட்டப் பயிரவர் ... எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத் தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள்

சித்ரப்பவுரிக்கு ... இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
எனவோத ... 'தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடகஎன்ற தாள ஓசையைக் கூறவும்,

கொத்துப்பறை கொட்ட ... கூட்டமாகப் பற்பல பறை
வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும்,

களமிசை முதுகூகை ... போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்

குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென கொட்புற்றெழ ... 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு 'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் குழறி வட்டமாகச் சுழன்று மேலே எழவும்,

நட்பற்ற அவுணரை ... சினேக எண்ணம் தவிர்த்து விரோத மனப்பான்மையே கொண்ட அசுரர்களை

வெட்டிப்பலியிட்டுக் குலகிரிகுத்துப்பட ... கொன்று பலி கொடுத்து, அசுரர் குல மலை 'கிரெளஞ்சகிரி' தூளாக,

ஒத்துப் பொரவல பெருமாளே.... தர்ம மார்க்கத்துக்குப் பொருந்தபோர் செய்யவல்ல பெருமாளே.

முருகன் என்றாலே 'தமிழ்' மற்றும் 'அழகு' என்பது தான் நம் நினைவுக்கு வரும். இந்த பாடல் தமிழில் எவ்வளவு அழகாக பொருளோடு உள்ளது ? எந்த ஒரு விஷயத்தையும் அதன் பொருள் உணர்ந்து செய்யும் போது நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சியே தனி தான் அல்லவா ?

இன்று இந்த பாடலும் அப்படித்தான் ...

எந்த வயதினராக இருந்தாலும், ஒரு விஷயம் நாம் புதிதாக தெரிந்து கொண்டோம் என்றாலே, அன்று நாம் ஏதோ மிகவும் சாதித்தது போலவும், புத்துணர்ச்சி பெற்றது போலவும் விளங்குவோம். இது இயற்கை...

இன்று இந்த பாடலின் பொருள் உணர்ந்ததின் மூலமும் அப்படித்தான் ஒரு எண்ணம் தோன்றும் என்று நினைக்கிறோம் ...

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !
வீரவேல் முருகனுக்கு அரோகரா !
முருகா சரணம் !!

உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...

நன்றி ...


ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,திருநெல்வேலி... 

Comments

  1. Replies
    1. இதன் விளக்கம் மிக அருமை,மனம் மகிழ்ச்சி அடைகிறது, நன்றி

      Delete
  2. விளக்கத்துக்கு மிக்க நன்றி !

    ReplyDelete
  3. இடை இடையே ஆங்கில வார்த்தைகளை போட்டு எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்தது இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. தமிழ் படித்து உணர்ந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தவும்.

      Delete
  4. சிவாய நமஹ தமிழ்கடவுளின் பாடல் விளக்கம் அருமை முருகா போற்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி... ஓம் முருகா ...

      Delete
  5. பாடலின் அர்த்தம் நன்றாக உள்ளது

    ReplyDelete
  6. ஐயா தமிழனாக பிறந்த என்ன தமிழை முழுமையாக உணர வைத்து தமிழ் கடவுளின் அழகை இந்த பாடல் வரிகளின் விளக்கம் என்னை மனிதனாக்கியத.

    ReplyDelete
  7. வணக்கம் மிக அருமையான விளக்கம் நன்றி

    ReplyDelete
  8. அருமையான விளக்கம். நன்றி

    ReplyDelete
  9. ஸ்ரீ ராமர் ஸ்தோத்திரம் (பூதலத்தை யோரடி...) சரியான பாடல் வரிகளுடன் வெளியிட வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

      Delete
  10. தெய்வப் பாடலுக்குத் தெளிவிக்கும்
    பொருளறிந்தேன்.நன்றி.-அனு.

    ReplyDelete
  11. மிக்க நன்றி ஐயா வாழ்க உங்கள் தமிழ் தொண்டு

    ReplyDelete
  12. சிறப்பான ,எளிமையான விளக்கம் அருமை.

    ReplyDelete
  13. நன்றிகள் ஐயா. இந்த வரிகள் நீண்ட காலமாக எமது சிந்தனையைத் தூண்டி வந்துள்ளன. இங்கு கூறப்பட்டுள்ள அமரர்கள் தேவர்கள் எனக் கூறப் படுகிறது ."முப்பத்து முவர்க்கத்தமரரும்" அடிபேண எனும் வரிகளில் முப்பத்து மூன்று 'வர்க்கம் ' எனப் பொருள் படுகிறது . அவ்வாறே இருப்பினும் முப்பத்து மூன்று கோடி என்றும் பொருள் கூறப்படுகிறது. அவ்வாறெனின் ஒவ்வொரு வர்க்கத்திலும் ஒருகோடி தேவர்கள் எனப் பொருள் கொள்ளலாம். அவ்வாறாயின் அவர்கள் யார் என எங்காவது குறிப்பிடப் படுகிறதா எனப் புரியவில்லை. நிச்சயமாக எங்கோ ஒரு விளக்கம் உள்ளது. சிங்களத்தில் பௌத்த மதக் கூற்றுக்களில் கூட "තිස්තුන් කොටි දෙවි දේවතාවන්' எனக் குறிப்பிடப் படுகிறது. ஆனால் அவர்கள் யார் என்பது விளக்கப்படவில்லை. அமரர்கள் எனும்போது மரணமற்றவர்கள் எனப் பொருள் படுகிறது. அவர்கள் முருகப் பெருமானுடைய படையணியைச் சேர்ந்த வீரர்களா? முருகப் பெருமான் அல்லாத வேறு கடவுளரைக் குறிக்கும் பொழுதும் 'முப்பத்து முக்கோடி தேவர்களும் , தேவதைகளும் கின்னரர்களும் புடை சூழ' எனக் குறிப்பிடும் பொழுது பரிவாரங்களா அல்லது வாழ்க்கையின் தத்துவங்களை எடுத்துரைக்கும் பொழுது கூறப்படும் மறைமுகமான ஒரு ஆழ்ந்த விளக்கமா என நீண்ட காலமாக மனத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது, இதன் விளக்கத்தை கூறி அருள முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. "கோடி" என்பது பிரிவுகளைக் குறிக்குமே தவிர, எண்ணிக்கையை அல்ல:
      இந்தக் குழப்பத்தின் ஆணிவேர் "கோடி" (Koti) என்ற பழமையான சமஸ்கிருத வார்த்தையில் உள்ளது. சமஸ்கிருதத்தில் "கோடி" என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன:
      கணித எண் (1 கோடி / 10 மில்லியன்).
      உச்சம், வகைகள் அல்லது பிரிவுகள் (Categories/Types).
      சதபத பிராமணம் போன்ற மூல வேத நூல்களில், இது த்ரயஸ்த்ரிம்சதி கோடி (Trayastrimsati Koti) என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு 33 வகையான உச்ச தேவர்கள் என்றுதான் பொருள், 33 கோடி கடவுள்கள் என்று அர்த்தம் அல்ல. காலப்போக்கில், மொழிகள் வளர்ச்சியடைந்தபோது, "கோடி" என்ற சொல் பொதுமக்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு கணித எண்ணாக மொழிபெயர்க்கப்பட்டது. இதுவே "33 கோடி தேவர்கள்" என்ற நம்பிக்கைக்குக் காரணமாக அமைந்தது.

      அந்த 33 பிரிவுகள் யார்?
      இந்த 33 பிரிவுகள் யார் என்பதற்கான தெளிவான பட்டியல் வேத நூல்களில் உள்ளது. அவர்கள் பிரபஞ்ச கூறுகளையும் தத்துவங்களையும் குறிக்கின்றனர்:

      8 வசுக்கள் (நெருப்பு, பூமி, காற்று, ஆகாயம், சூரியன், விண்வெளி, சந்திரன், நட்சத்திரங்கள் போன்ற பஞ்சபூத மற்றும் பௌதிகக் கூறுகளின் தேவர்கள்)

      11 ருத்திரர்கள் (உயிர்ச் சக்திகள் / மூச்சுக்காற்றின் வடிவங்கள்)

      12 ஆதித்தியர்கள் (சூரிய ஆண்டின் 12 மாதங்களைக் குறிக்கும் தேவர்கள்)

      2 அஸ்வினி குமாரர்கள் (மருத்துவம் மற்றும் விடியலின் இரட்டைச் சூரிய தேவர்கள்; சில நூல்களில் இவர்களுக்குப் பதிலாக இந்திரனும் பிரஜாபதியும் குறிப்பிடப்படுகின்றனர்).

      மொத்தம் = 33

      அவர்கள் முருகப் பெருமானின் படையினரா?
      பதில்: இல்லை. அவர்கள் பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பொதுவான அண்டக் கூறுகள் (வானவர்கள்) ஆவர். இருப்பினும், கந்த புராணம் மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள திருப்புகழ் வரியின் சூழலில், இந்த 33 வகையான தேவர்களும் சூரபத்மன் என்ற அரக்கனால் துன்புறுத்தப்பட்டனர். முருகப் பெருமான் அந்த அரக்கனை வீழ்த்தியபோது, இந்த 33 வகையான தேவர்களும் நன்றியோடு அவரது பாதங்களை வணங்கினர் (அடிபேண). இவர்கள் முழுமுதற் கடவுளர்களின் பரிவாரங்களாகச் செயல்படுகிறார்கள்.

      Delete
  14. இந்த பாடலின் ஒவ்வொரு வரியிலும் சூட்சுமமான பொருள் பொதிந்திருப்பதை உணர்கிறேன்.நீங்கள் பழந்தமிழ் வரிகளை இன்றைய தமிழில் பெயர்ப்பு செய்திருக்கிறீர்கள். ஆனால் ஒவ்வொரு வரியிலும் சூட்சும அர்த்தம் இருக்கும். உதாரணத்திற்கு விநாயகர் அகவல் இதில் மேலோட்டமான பொருள் வேறு. ஆனால் சைவ சித்தாந்த ஞானிகள் ஒவ்வொரு வரியும் குண்டலினி சக்தியோடு விநாயகர் என்ற உருவம் மூலமாக இறை சக்தியோடு இரண்டர கலப்பதற்கான வழிமுறைகளை கோடிட்டு காட்டியிருப்பது இப்பாடலில் பொதிந்திருக்கும் உண்மை. முத்தை தரு பாடலுக்கும் அப்படி ஒரு விளக்கம் கண்டிப்பாக இருக்கும். இணையத்தில் முயல்வோம். உங்களின் இந்த நல்ல முறைச்சிக்கு இறை அருள் எப்பொழுதும் இருக்கும்.

    ReplyDelete
  15. பாடலின் வார்த்தைக்கு வார்த்தை விளக்கம் நன்றாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது, மிக்க நன்றி.

    ReplyDelete
  16. மிக்க நன்றி 🙏🙏

    ReplyDelete
  17. மிக்க நன்றி 🙏🙏

    ReplyDelete
  18. அருமையான விளக்கம்

    ReplyDelete
  19. பல வரிகளுக்கு பொருள் புரிந்தாலும் முக்கியமான சில வரிகளுக்கு நீங்கள் அளித்திருக்கும் விளக்கம் அருமை. பாடலைப் பாடும் போது பொருள் உணர்ந்து பாடுவதே நல்லது. இது எனது கருத்து. மிக்க நன்றி.

    ReplyDelete
  20. நன்றாக உள்ளது 😊நன்றி

    ReplyDelete
  21. அருமை அற்புதம் முருகன் என்றாலே தமிழ் தமிழ் என்றாலே பேரானந்தம் அருமையான விளக்கம் நன்றிகள் ஐயா

    ReplyDelete
  22. யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் நன்றிகள் கோடி

    ReplyDelete

Post a Comment

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status